புதினங்களின் சங்கமம்

“இங்கிலீஷ் படம்…. செக்ஸ் படம் போட்டிருக்கான்… போகலாமா..?”

“எந்த தியேட்டர்ல..?” திருநெல்வேலி பக்கத்தில் , ஏதோ ஒரு தியேட்டரின் பெயரைச் சொன்னான் என் கல்லூரி் வகுப்புத் தோழன்..!
கல்லூரியின் இளமைக் காலங்களில் “அந்த மாதிரி” கிளுகிளு படங்களை , நண்பர்களோடு சேர்ந்து பார்ப்பதில் ஒரு தனி கிக் இருக்கத்தான் செய்தது..!
அடுத்த செகண்டே பஸ்சில் ஏறி …அடுத்த ஒரு மணி நேரத்தில் தியேட்டர் வாசலில் ஆஜர் ஆனோம்.. .
11.30 ஷோ…!
போஸ்டர் பார்த்தோம்…
THE PREGNANCY AND CHILDBIRTH !
மருத்துவ ரீதியிலான படம் ! ஆனால் தியேட்டர் வாசலில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரிலேயே “அந்த மாதிரி” காட்சிகளைத்தான் ஏராளமாக அச்சிட்டிருந்தார்கள்…!
அதற்காகத்தானே அந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள்..!
கிட்டத்தட்ட ஹவுஸ்புல் …!
“எப்படா படம் போடுவான்..?” என்ற ஏக்கம் எல்லோர் கண்களிலும் ஏகத்துக்கும் இருந்தது..! ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக….!
“கிர்ர்ர்ர்” என மணி அடித்தது….போட்டுட்டாம்ப்பா …!
நியூஸ் ரீல்..விளம்பரம் எதுவும் இல்லாமல் படம் ஓடத் துவங்கியது…!
ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலேயே “அந்த மாதிரி” காட்சிகள் தொடங்க …. நாங்கள் குஷியாக ரசிக்கத் தொடங்கினோம்…!
PREGNANCY யை விளக்குவதாக சொல்லி கணவன்-மனைவி ரொமான்ஸ் காட்சிகளை நிறையவே காட்டினார்கள்… இங்கிலீஷ் படம் என்பதால் எல்லாம் தாராளமாகவே இருந்தது…கண் இமைக்காமல் ரசித்துக் கொண்டிருக்கும்போதே…….
இன்டர்வெல்…!
அடடா …அதுக்குள்ளேயா..?
“வாங்கப்பா , போய் சூடா ஒரு கப் டீ சாப்பிட்டுட்டு வரலாம்…”
கேண்டீன் போய் சூடான டீ குடித்துக் கொண்டே , இதுவரை ரசித்த சூடான காட்சிகளை சுவாரஸ்யத்தோடு அசை போட்டுக் கொண்டிருந்தபோது…..
“ஏய்ய்ய் …படம் போட்டுட்டாம்ப்பா ..”
அடித்துப் பிடித்து தியேட்டருக்குள் ஓடி வந்து ,மீண்டும் அவரவர் இருக்கையில் ஆவலோடு அமர்ந்தோம்…
படம் ஓடிக் கொண்டிருந்தது ….!
இன்டர்வெல்லுக்கு முன்வரை PREGNANCY…இப்போது CHILDBIRTH…!
குழந்தை பிறப்பதை தத்ரூபமாக காட்டினார்கள்…
மருத்துவமனை…
பிரசவ அறை…..
அந்தக் கர்ப்பிணித் தாய் வலியால் மரண ஓலம் கூட தோற்றுப் போய்விடுமளவுக்கு கதறுகிறாள்….துடிக்கிறாள்…
நெளிகிறாள்… அவள் முகம் சிவக்கிறது…
ஆனால்…படம் பார்த்துக் கொண்டிருந்த எங்கள் முகம் வெளிறிக் கொண்டிருந்தது…!
குழந்தை பெறுவது இவ்வளவு கஷ்டமா..? நம் தாய் இத்தனை வலிகளையும் வேதனைகளையும் தாங்கிக் கொண்டுதான் நம்மைப் பிரசவித்து எடுத்தாளா..?
நான் நண்பர்களை திரும்பிப் பார்த்தேன்….எல்லோருமே கிட்டத்தட்ட என் மன நிலையில்தான் இருக்கிறார்கள் என்பது அந்த அரை இருட்டிலும் அவர்கள் முகங்களில் தெளிவாகத் தெரிந்தது…!
எனக்கு முன் சீட்டில் இருந்த ஒரு இளைஞன் அந்த பிரசவ காட்சியை காண திராணி அற்றவனாய் கைகளால் முகத்தை மூடி , முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டு முனகினான்…. “ஓ…மை.. காட்…!”
இப்போது அந்தத் திரை அரங்கத்துக்குள் இருந்த அத்தனை இளைஞர்களுக்கும் , திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருந்த , அந்தப் பெண்ணின் அரை நிர்வாணமோ…அந்தரங்க உறுப்போ ..எந்தக் கிளுகிளுப்பையும் ஏற்படுத்தவில்லை..!
மாறாக அந்தத் தாயின் வலியும் , வேதனையும் , கத்தலும், கதறலும்..மரண ஓலமும்….
படம் ஓடிக் கொண்டிருந்த திரையை மறைத்தது , என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் திரை..!
“THE END”
# படம் முடிந்து வெளியே வந்தோம்…பஸ் ஏறி ஹாஸ்டல் வந்து சேரும்வரை எவரும் எதுவும் பேசவில்லை..!
அடுத்து வந்த சில காலங்களுக்கு ரோட்டில் நடந்து போகும்போது , எதிரில் வரும் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தியேட்டரில் நான் கேட்ட அந்தக் கத்தலும் , கதறலும் என் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது…!
அப்போது முதல்…
பெண்களை நானும் என் நண்பர்களும் பார்க்கும் பார்வை , சற்றே மாற ஆரம்பித்தது…!
அவர்களைப் பார்க்கும்போதே பரிதாப உணர்ச்சிதான் முதலில் எங்களுக்குத் தோன்றியது…!
நாங்கள் பார்த்து ரசிக்கும் ஒவ்வொரு இளம் பெண்ணும் , தங்கள் வாழ்வில் , அந்தப் பிரசவ வலியை , கத்தலை, கதறலை, அலறலை கட்டாயம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணந்தபோது…. தாய்மையை கையெடுத்து, கடவுளுக்கு ஈடாக தொழத் தோன்றியது…!
தாய்மையின் மதிப்பு ,
தானாக எங்கள் மனதுக்குள் உயர்ந்தது..!
ஆம்…அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை!!!!
பிரதி பண்ணப்பட்ட பதிவு.