பல்சுவை செய்திகள்புதினங்களின் சங்கமம்

“அவளை நான் கொல்லும்போது அவள் கடைசியாகச் சொன்னது I Love You”

பெர்த் நகரின் Carlisle பகுதியில் தனது மனைவியை கொலை செய்த Ahmed Seedat என்ற கணக்காளருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி தனது மனைவியான Fahima Yusuf-ஐ (32 வயது) Ahmed Seedat இரும்புக்கம்பியால் அடித்துக் கொலைசெய்துவிட்டு வீட்டின் பின்புறம் புதைத்திருந்தார்.

Fahima Yusuf கொலைசெய்யப்பட்ட சமயம் அவர்களது 5 வயது மற்றும் 2 வயதுப் பிள்ளைகள் மற்றைய அறையில் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர்.

தனது மனைவியைக் கொல்ல வேண்டுமென்பது Ahmed Seedat-இன் நீண்டநாள் திட்டம் எனவும் சடலத்தை எப்படியெல்லாம் புதைக்கலாம் என்பது தொடர்பில் அவர் இணையத்தில் தேடுதலை மேற்கொண்டிருக்கிறார் எனவும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

அதுமட்டுமல்லாமல் வீட்டின் பின்புறம் நீச்சல் தடாகம் அமைக்கவேண்டும் எனக் கூறி தொழிலாளர் ஒருவரை பணிக்கமர்த்தி முன்கூட்டியே குழிதோண்டுவதற்கான ஏற்பாடுகளையும் Ahmed Seedat செய்திருக்கிறார்.

மனைவியைக் கொலைசெய்துவிட்டு ஏற்கனவே தன்னுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் மனைவியின் தங்கையுடன் உறவினை ஏற்படுத்துவதற்கு அவர் திட்டமிருந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தப்பின்னணியில் கடந்த ஜனவரி மாதம் தானே இக்கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்ட Ahmed Seedat, பாலியல் ரீதியாக தனது மனைவிக்கு அதீத எதிர்பார்ப்பு இருந்ததாகவும், சம்பவம் நடைபெற்ற அன்றையதினம் அவர் வெறிபிடித்தவர் போன்று நடந்துகொண்டதால் அவரை அடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் Fahima Yusuf மரணமடைவதற்கு முன் தன்னைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தைகளை சொன்னதாகவும் அதுவே அவரது இறுதி வார்த்தைகள் எனவும் Ahmed Seedat நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம் நடைபெற்றிருந்தநிலையில், இக்கொலை நன்கு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என்பது தெரியவந்திருப்பதாகவும் இது ஒரு மிலேச்சனத்தனமான படுகொலை எனவும் விமர்சித்த நீதிபதி, 23 வருடங்களுக்கு பரோலில் வெளிவரமுடியாதபடி ஆயள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.