Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணிகள் விசுக்கோத்துக்கள் வெங்காயங்களா??

இங்கு ஒருவர் தனது கண்டு பிடிப்பு என கூறி புரதான காலத்து மக்கள் தொடங்கி தற்போது வரை பலராலும் பாவிக்கப்பட்டு வரும் உயிர்வாயு தொழிற்பாட்டை வெளிப்படுத்தி அதனைத் தயாரிப்பதற்கான செலவாக 2 லட்சம் என தனது நிறுவனத்தின் பெயருடன் தெரிவித்துள்ளார். குறித்த உயிர்வாயுத் தொழிற்பாட்டு செயற்பாடுகளை தரம் 9ல் படிக்கும் மாணவன் கூட வீட்டில் செய்துவிடுவான். பெரும்பாலான பாடசாலைக் கண்காட்சிகளில் இந்தச் செயற்பாடுகள் காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்கள் வீட்டுக்கழிவு, மாட்டு சாணக் கழிவில் இருந்து உற்பத்தியாகும் உயிர்வாயு பற்றி அந்த நேரங்களில் அக்கறைப்படவில்லை. ஆனால் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு கிழக்கு உட்பட இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயுத் தட்டுப்பாட்டால் மக்கள் முன்னைய காலங்களில் இருந்த விறகு அடுப்பு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இந் நேரத்திலேயே இந்த கவர்ச்சிகரமான விளம்பர யூரியுப் வீடியோ மற்றும் இவரது நிறுவன வீடியோ வந்துள்ளது. இந்த உயிர்வாயு தயாரிப்பதற்கு தேவையான உயிர்வாயு உற்பத்தி செய்யும் தாங்கியை சீமெந்தால் அல்லது அதை விடச் சுலபமாக 100 லீற்றர் பீப்பாய் அல்லது ஆயிரம் லீற்றர் தண்ணீர்த் தாங்கி ஒன்றின் உதவியுடன் மிக இலகுவாகச் செய்து முடிக்கலாம். உங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் பிளம்பர் ( குழாய் பொருத்துளர்) ஒருவரே இதனை ஒரு சில மணித்தியாலங்களில் செய்து முடித்துவிடுவர். இதற்கான கூலி மற்றும் பொருட்களுக்கான மொத்தச் செலவீனமே 30 ஆயிரங்களுக்குள் மட்டுமே.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவியுங்கள் என கூறியும் வேலை வாய்ப்பு,சுய பொருளாதாரதம், இலங்கையின் கடன், இந்திய நண்பர்கள் என தம்மை பெரும் செயற்பாட்டாளர்கள் என காட்டியும் பசப்பு வார்த்தைகளுடன் இவ்வாறானவர்கள் மேற்கொள்ளும் ஏமாற்று வேலைகளுக்கு அப்பாவி மக்கள் பலியாககூடாது.

இந்த நிறுவனத்தை சேர்ந்த குறித்த நபர் ஏற்கனவே தனது உற்பத்திகளை பெரும் விலையிலேயே விற்றுவருவது அறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவை ஆடம்பர தேவைகளுக்கான தயாரிப்புக்கள் என்ற காரணத்தால் அவை சாதாரண மக்களைப் பாதிக்காது என்பதால் அவை தொடர்பாக கவனத்தைச் செலுத்தவில்லை. ஆனால் இவரது உயிர்வாயு தாங்கியின் கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்து பல நடுத்தரவர்க்கத்தினர் ஏமாந்துவிடுவார்கள் என்பதால் இதனை சுட்டிக் காட்டியுள்ளோம்.

சாதாரனமாக மட் பாண்டங்கள் மற்றும் ஈயம், பித்தளை வார்ப்புக்களால் செய்யப்படும் பொருட்கள் போல் பைபர்கிளாஸ் எனப்படும் பிளாஸ்ரிக் இளைகளால் ஒட்டுவது மற்றும் பொருட்களை வார்ப்பது போன்றவற்றை செய்யலாம். மிகக் குறைவான பொருட் செலவுடன் பைபர் கிளாசில் தயாரிக்கப்படும் சில ஆடம்பரப் பொருட்களை குறித்த நிறுவனம் அதிக விலைக்கு விற்பதாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வந்த போதும் காசு அதிகம் உள்ளவர்கள் அவ்வாறான பொருட்களை வாங்குவதால் அதனால் இது தொடர்பாக கவனம் செலுத்தவில்லை. குறித்த நிறுவனத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தலைப்பகுதியில் உள்ள பைபர் கிளாஸ் தகட்டில் ஏற்பட்ட சாதாரண வெடிப்பை ஒட்டுவதற்கே அந்த மோட்டார் சைக்கிளின் தலைப்பகுதியின் மொத்த பெறுமதியின் அரைவாசிப் பெறுமதியான 2 ஆயிரம் ரூபாவை வாங்கியதாக ஒருவர் மிகவும் கவலையுடன் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உங்களது மோட்டார் சைக்கிள் அல்லது வாகனங்கள் விபத்துக்குள்ளாகி சில பைபர் கிளாசில் செய்த பாகங்கள் உடைந்துவிட்டால் நீங்களே அதற்கான பைபர் கிளாஸ் இழைகளை யாழில் உள்ள மீனவர்களுக்கான வலைகள் மற்றும் பொருட்கள் விற்கும் இடங்களில் வாங்கி நீங்களாகவே அதனை சுலபமாக ஒட்டிக் கொள்ளலாம். இதற்கான யூரியுப் வீடியோக்கள் ஏராளம் உள்ளன. அவற்றை பார்வையிட்டு நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பல முக்கியஸ்தர்களை இவ்வாறானவர்கள் தமது கைகளுக்குள் வைத்துக் கொண்டு அப்பாவிகளை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் உற்பத்தியாளரை ஊக்குவியுங்கள் என கூறிக் கொண்டு அறாவிலையில் தமது உற்பத்திகளை விற்கும் ஒவ்வொருவரையும் இனிவரும் காலம் இங்கு வெளிப்படுத்துவோம்.

நன்றி.. வம்பன்