Vampan memesபுதினங்களின் சங்கமம்

கலியாணம் செய்து கொடுக்க பஞ்சிப்படும் பெற்றோர்களுக்கு இது சமர்ப்பணம்!!

☀️தமிழரின் ஆண் பெண் திருமண வயது 35- 40 என்னும் நிலையில் உள்ளது. 30 வயதினைத் தாண்டிய பெண்களைக் கொண்டிருக்கும் பெற்றோரும் 35 வயதினைத் தாண்டிய மகன்களைக் கொண்டிருக்கும் பெண்களும் எந்தவித தளர்வுப்போக்கும் இன்றிச் சாதிபேதங்களை மாத்திரமன்று, பிரதேச கிராமபேதங்களைக்கூட ஒத்தசாதியருள் பார்த்து “இன்னும் பிள்ளைக்கு வயதிருக்கு” என்று ஆறுதலடைந்தவாறுள்ளனர்.

☀️ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒஸ்டியோபோரோசிஸ் என்னும் முதுகெலும்புத் தேய்வு ஏறத்தாழ 35 வயதில் தொடங்குவதை இந்த பெற்றோர் தெளிந்துகொள்வதில்லை. 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தம் முதுகுநோவினை குழந்தையைப் பெற்றெடுத்ததோடு சம்பந்தஞ் செய்து, மருத்துவர் செய்த மகப்பேற்று அறுவைசிகிச்சையினாலேயே அல்லது அதற்கு வழங்கப்பட்ட விறைப்பு ஊசியினாலேயே தமக்கு முதுகுநோ என்று கருதுவர்.அது மாத்திரமே ஒரு தனிக்காரணியாக எப்போதும் இருப்பதில்லை என்னும் உண்மையினை இவர்கள் அறிவதில்லை. உண்மையில் அவர்களது வயது ஒஸ்டியோபோரோசிஸ் நடக்கத்தொடங்கிவிட்ட வயதென்பது அவர்களுக்குத் தெரியாது.இது தாம்பத்தியம் முதலாய ஏராளமான சிக்கல்களை தம்பதியரிடம் உருவாக்கும்.அதுபற்றி 35 வயதில் திருமணஞ்செய்து கொடுக்கும் பெற்றோருக்கு எக்கவலையும் இல்லை.

☀️முப்பது வயதினைக் கடக்கும்போது ஆண்களுக்கு விந்தணுகள் குறைந்து செல்லும், பெண்களுக்கு முட்டை கருப்பையில் பதியும் வினைத்திறன் குறைந்து செல்லும்.அதுபற்றி பெற்றோருக்கு எந்த அக்கறையும் இல்லை.டவுண் சின்ரம் குழந்தைகள், ஓட்டிசம் குழந்தைகள், இதயத்துவார குறைபாடுடைய குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புக்கூடுவதுடன், வளர்ந்தபின் மனநோய்க்கு உள்ளாகக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையும் முதிர்ந்த வயதுத் திருமணங்களால் அதிகரிக்கின்றன.முதிர்ந்த வயதுத் திருமணம் என்பது விஞ்ஞானபூர்வ ஆய்வில் முப்பது வயதிற்கு மேற்பட்ட திருமணங்கள் என்பது கூறப்பட்டுள்ளதுடன், 28 – 32 வயதுக்குள்ளேனும் திருமணத்தினை கட்டாயம் நடத்திமுடித்துவிடவேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.

☀️ஆனால் இவ்வுண்மைகளைத் தெளியாத கேடுகெட்ட நம்சமூகத்தில் திருமணம் ஆகாத மூத்த ஆண்கள் – மூத்த பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் உள்ளது. பத்தில் ஒருவர் என்னும் எண்ணிக்கையில் இதனை கூறுவது மிகையன்று என்பது நம் எதிர்பார்ப்பு. இது நம் இன வளர்ச்சியில் பெரும் பாதகத்தினை ஏற்படுத்திவருதல் கண்கூடு. ஏனைய சமூகத்தவர் இல்லங்களில் 25- 27 வயதிற்குள் திருமணம் நடக்கும் விகிதம் தமிழரைக் காட்டிலும் அதிகம்.அதிலும் வீட்டுக்கு மூன்று குழந்தை என்று பெற்றெடுக்கும் விகிதமும் தமிழரைக் காட்டிலும் அதிகம். ஒரு பிள்ளை பெறுவதற்கே வயதுகடந்து திருமணஞ் செய்வோர் பெரும் பிரயத்தனப்படவேண்டியுள்ளது. இவையெல்லாம் பெற்றோர்களால் கிஞ்சித்தும் சிந்திக்கப்படுவதில்லை. மேலும் தமிழர் வீடுகளில் ஓட்டிசம் குழந்தைகள், டவுண் சின்ரம் குழந்தைகள் என்று நோயுடைய பிள்ளைகள் அதிகமாக உள்ளனர். இவையும் முதிர்ந்த வயது தாம்பத்தியத்தினால் விளைவன என்பது பலரால் அறியப்படுவதில்லை. இப்படி, தமிழர் திருமணங்கள் பலவும் வாடிய பூக்கொண்டு செய்யும் மாலைகள்போன்றுதான் நிகழ்கின்றன. இவைபற்றி எந்த அக்கறையும் நம்சமூக வழிகாட்டிகளிடம் இல்லை. சோதிடம் பார்க்கும் சோதிடர்களுக்கும் சமயக்குருமார்களுக்கும் இதனைப்பற்றிய அக்கறை கொஞ்சங்கூட இல்லை. அவர்கள் சாதகத்தில் பாவம் கீவம் என்று செய்யும் அட்டூழியங்கள் ஏராளம்.அதில் செவ்வாய் தோசம் என்னும் பெயரில் செய்யும் கேடுகள் ஏராளம்.

☀️மூன்று பிள்ளைகளும் ஏழு பேரப்பிள்ளைகளும் 9 பூட்டப்பிள்ளைகளும் கண்டு 92 வயது கடந்து வாழும் தம்பதியர், ஒருவாரத்திற்கு முன்னரே தெரிந்துகொண்டனர் தமக்கு சாதகப்பொருத்தம் இல்லையென்பதை. சாதகப்பொருத்தம் இல்லையென்றால் எப்படி உங்கள் இருவருக்கும் கல்யாணஞ் செய்து வைத்தனர் என்று நாம் அவர்களிடம் கேட்டோம். தமது தாத்தா தாம் இருவரும் திருமணஞ் செய்யவேண்டும் என்று நிச்சயித்து செய்துவைத்தார்.எனவே யாரும் சாதகம் பார்க்கவில்லை என்றார். பஞ்சாங்கங்களில் இதனை ஆப்தவாக்கியத் திருமணம் என்பர். இதற்கு சாதகம் வேலைசெய்யாது.ஆப்த வாக்கியத் திருவருள் முன்னின்று வழிகாட்டும். அதாவது, தெய்வப்பிரசன்னம் பார்த்துசெய்யும் திருமணங்கள், குரு விரும்பி இன்னார்க்கு இன்னார் என்று கூறிச்செய்துவைக்கும் திருமணங்கள், வீட்டில் உள்ள பெரியோர்களாகிய தாத்தா,பாட்டிமார் முதலிய நிறைவான வாழ்வு வாழ்ந்து பக்குவ ஆன்மாக்களாய் விளங்கும் மூத்தோர்கள் முடிவுசெய்யும் திருமணங்களுக்கு சாதகம் வேலைசெய்யாது. திருவருளே முன்னின்று அருளும். அதுபோல், தெய்வத்தின்பால் நம்பிக்கைவைத்து செய்யும் திருமணங்களுக்கும் சாதகம் பார்த்தல் கூடாது. செல்வச்சந்நிதியில் காதலிபோர் திருமணஞ் செய்யும் மரபு யாழ்ப்பாணத்தில் உண்டு. கடவுளைப் பூரணமாகச் சரணடைந்து செய்யும் திருமணங்களுக்கு சாதகம் எந்தப் பங்கும் வகிக்காது. நாளும் கோளும் சிவனடியாருக்கு தீது செய்யாது என்ற திருஞானசம்பந்தர் அருள்வாக்கு இதுபற்றியதேயாகும். சகாதேவன் துரியோதனனுக்கு குறித்துகொடுத்த யுத்தம் தொடங்கவேண்டிய நாளினையே சிவபத்தராகிய கண்ணன் மாற்றிக்காட்டியதும் இதனை உணர்த்துவதற்கேயாகும். சிவபெருமானையே வழிபட்டு வாழ்வோருக்கு சாதகங்கள் எந்தத் தீமையும் தராது. சிவபெருமானின் திருவருள் முன்னின்று வழிகாட்டும்.

☀️எவ்வகைத் திருமணங்களுக்கு சாதகம் பலிக்காது என்றுகூட நம்மவர்களுக்குத் தெரிவதில்லை. சாதகங்களில் எவற்றுக்கெல்லாம் விதிவிலக்கு உண்டென்றும் ஆராய்வதில்லை. சொவ்வாய்தோசம் விதிவிலக்குகள் ஏராளம் சாத்திரபூர்வமாக விளங்கியிருக்க, வாட்சப் யூட்டியூப் சோதிடர்கள் எதனையும் அறியாது பார்க்கும் சாதகமெல்லாம் செவ்வாய்த்தோசமென்று பலர் வாழ்க்கையைக் கெடுத்துப் பிழைக்கின்றார்கள். அதனை நம்பியொழியும் பெற்றோரும் நம் இனத்தின் கேடுகளாவர்.

☀️இவைபற்றி ஆன்றோர் தொடர்ச்சியாகப் பேசவேண்டும்.தமிழினத்தினை சோதிட மூடநம்பிக்கையில் இருந்து மீட்டு, சிவபத்தியை நோக்கி நகர்த்தவேண்டும்.சோதிடம் உண்மை.ஆனால் அதற்கு விதியும் விதிவிலக்கும் உணராது நம்புவது மூடநம்பிக்கை. நவக்கிரக தோச பரிகாரங்கள் அருளும் என்பது முழுமூட நம்பிக்கை. கடந்த பிறப்பில் பல பெண்களைத் திருமணஞ்செய்து மோசஞ் செய்திருந்தால், இப்பிறப்பில் திருமணம் நடக்காது ஆசைகளோடு உழலவேண்டும் என்னும் விதியிருக்க, அந்த வினைவழி விதிகளை நிலைநாட்டும் அடிமைத்தொழிலாளராகிய கிரகதேவர்களால் என்னசெய்ய முடியும்? வினைகளை அறுப்பது முழுமுதற்க் கடவுளாகிய சிவபெருமான் வழிபட்டால் மாத்திரமே முடியும். சிவபெருமான் வழிபாடென்பது முருகன் முதலாய சிவவடிவங்களை வழிபடும் வழிபாடாகும்.அதுவே நமக்கு நம் முன்னோர் காட்டித்தந்த வழியுமாகும்.

திருச்சிற்றம்பலம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

திருச்சிற்றம்பலம்

??????எல்லாம் திருவருட்சம்மதம்??????

மருத்துவர் கி.பிரதாபன் (ஈசான தேசிகர்)
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை