புதினங்களின் சங்கமம்

நான்கு மடங்கு மின் கட்டணம் உயரும்!! மின்சக்தி அமைச்சர் கூறுகின்றார்!!

எதிர்வரும் காலங்களில் மின் கட்டணம் மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரிக்கப்படலாம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
9 வருடங்களாக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாத நிலையில் அரசு பெரியளவிலான பணத்தை மின்சாரத்திற்காக செலவிடுவதாக அவர் தெரிவித்தார்.

உத்தேச மின் கட்டண மாற்றங்களினால் பல நிறுவனங்களின் தற்போதைய மின்சார கட்டணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் சில முன்மொழிவுகளை முன்வைத்துள்ள போதிலும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் அங்கீகரிக்கப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சர் கூறினார்.

அமைச்சரவைக் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

கணிசமான அளவு அதிக அலகு மின்சாரத்தை பயன்படுத்தும் ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் பெரிய வீடுகள் போன்ற நுகர்வோருக்கு மின் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும் என்று தாம் கருதுவதாக அமைச்சர் கூறினார்.

கருணைக் காலம் வழங்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் இந்தத் திருத்தத்தை நடத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறினார்.

குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் குறைந்த மின்சார அலகுகளை பயன்படுத்தும் நுகர்வோரின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், கட்டணங்கள் திருத்தப்பட்டால், சில ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 300-400 சதவீத மின் கட்டணத்தை அதிகரிக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.

இதுபோன்ற நிறுவனங்களில் வரும் மாதத்தில் சூரிய மின்சக்தி பனல்களை அமைக்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்திய அமைச்சர், அரச மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களிலும் இதைச் செய்ய எதிர்பார்க்கிறேன் என்று சுட்டிக்காட்டினார்.