காலிமுகத்திடலில் நடந்த சம்பவங்கள் கர்மவினையா?? பரபரப்பு தகவல்கள்
நேற்று வரையில் காலிமுகத்திடல் ஆரப்பட்டத்தில் ஒரு அசம்பாவிதம் பதிவாகியிருக்கவில்லை. தோராயமாக ஒரு மாதமாக அந்த நிலம் அமைதியாகவே இருந்தது. ஒரு குற்றச்சாட்டு இல்லை. ஆனால் வழக்கம் போலவே காட்டுமிராண்டித் தனத்தின் மூலம் மக்களைப் பணியவைக்கலாம் என்ற முனைப்பிலேயே ராஜபக்ஷ குடும்பத்தால் ஏவலாட்கள் அனுப்பப்பட்டிருந்தார்கள். வன்முறை கூடவே கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு எதிராய் வன்முறை நிகழும் போது நான் தூக்கும் ஆயுதம் வன்முறை அல்ல, ” நீதி ” .
அரசியல்வாதிகளின் சொத்துக்கள் எரிப்பையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். மக்கள் வயிறு எரியும் போது கட்டியெழுப்பப்பட்ட சுகபோகங்கள் அவை. மக்களே எரித்திருக்கிறார்கள்.
நிற்க.
ராஜபக்ஷ ஆதரவாளர்கள் வந்தார்கள் , காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை தாக்கினார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்கமாட்டாத போராட்டக்காரர்கள் திருப்பித் தாக்கினார்கள். இது அத்தோடு முடிந்திருந்தால் அது ” நீதி “. ஆனால் அதன் பின்னர் நடந்தது எல்லாம் மனநோயின் வெளிப்பாடு.
உன் எதிரி உன் தாக்குதலை சமாளிக்க மாட்டாமல் சரணடைந்துவிட்டாலோ, திருப்பித் தாக்க வக்கற்றுப் போனாலோ அவன் மேல் மீள தாக்குதல் நிகழ்த்தாதிருத்தலே அறம். அதுபோக நடந்தது ஒன்றும் ஆயுத மோதல் கூட இல்லை. இரு தரப்பு ஆதரவுக் குழுக்கள். சாமானிய மக்கள்.
தேடித் தேடித் தாக்கியது ஒரு புறம் இருக்க, நிர்வாணப் படுத்தியது, உள்ளாடைகளுடன் ஓட விட்டது எல்லாம் மனப்பிறழ்வு. வைத்திய சாலைக்குள் புகுந்து தாக்குவதை எல்லாம் எப்படி வீரத்தின் பட்டியலில் சேர்க்கிறார்கள் என்று புரியவில்லை.
பேர வாவிவிக்குள் தள்ளப்பட்டவர்களை ஒரு நாள் முழுதும் கரை ஏறவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள். காலையில் தேனீர் கொடுத்திருக்கிறார்கள் . அதுவும் வாவியை விட்டு வெளியேற விடாமல். அந்த நேரக் கோபங்கள் வேறு. ஆனால் இதெல்லாம் திட்டமிட்ட mob மனநிலை.
போதக்குறைக்கு எதிரிக்குப் புரியும் மொழியில் பேசவேண்டும் என்று ஒப்பற்ற அந்த தலைவனின் கூற்றை இன்னமும் துணைக்கு கூப்பிடுகிறார்கள். எங்கே, அந்த தலைவனின் சேனை, இறந்த ஒரு இராணுவ வீரனை அல்லது பிடிபட்ட இராணுவ வீரனை, கேளிக்கைக்காகவும் அவமானப்படுத்தவும் நிர்வாணப்படுத்தி, அதை ரொமாண்டிசைஸ் செய்து கொண்டாடிய வரலாற்றைக் காட்டுங்கள்?
இதே மே மாதத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளையும், பொதுமக்களையும் நிர்வாணப்படுத்தி, அதை காணொளி எடுத்து கொண்டாடினார்கள் என்று தானே அரச படைகளை காட்டுமிராண்டிகள் என்றீர்கள். அது தானே இப்போதும் நடக்கிறது.
ஐயா, அந்த குண்டர்கள் பொய் பேசுபவர்களாகவே இருக்கட்டும். சமுர்த்தியை வெட்டுவார்கள் என்ற பயத்தில் வந்தேன் என்றது சப்பைக் கட்டாகவே இருக்கட்டும். அட! அவர்கள் தென்னிலங்கையின் பில்லியனர்களாக கூட இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக தாக்கிவிட்டு நிர்வாணப்படுத்துவது தான் வீரமா?
இவர்கள் ராஜபக்ஷவின் ஆட்கள் என்றால் சரணைடந்த புலிகள் பிரபாகரனின் ஆட்கள் இல்லையா?
நீதியைப் பேசுவதானால் ஒரு போல பேசவேண்டும். இந்த நிர்வாண வேடிக்கையை ரசிக்கும், கெக்கெலித்துச் சிரிக்கும் யாருக்கும் தமிழருக்கெதிராக மிலேச்ச இராணுவம் புரிந்த குற்றங்களுக்கெதிராய் பேசும் அருகதையில்லை.
கீழே இருப்பது, ” மச்சான்! எப்புடி நம்மள அடிக்க வந்த ஆக்களுக்கு சாத்துக் குடுத்து அம்மணமாக்கி விட்டிருக்கு. எப்புடி நம்மட கெத்து. எப்புடி எங்கட தழல் வீரம் ?” என்று கெக்கரித்து, அந்தப் படங்களை வைத்து பகடியும் மீமும் செய்து சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்ட படங்கள் சில. படங்களுக்கான காலம் வேறு வேறு. ஆனால் செய்தவர்களினதும், கொண்டாடுபவர்களினதும் மனநிலை ஒன்று தான்.
இது ஒரு பேஸ்புக் பதிவாகும்
