Vampan memesபுதினங்களின் சங்கமம்

ஜெய் பீம் படம் போன்றதொரு சம்பவம் யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது ?

சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னரான காலப் பகுதியில் இடம்பெற்ற 35 லட்சம் ரூபா மதிக்கத்தக்க திருட்டுச் சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி சுன்னாகம் பொலிஸாரால் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் சிறிஸ்கந்தராஜா சுமணன் முதலாவது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டார். எனினும் விசாரணைக்காக கிளிநொச்சி, வட்டக்கச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமணன் பொலிஸ் காவலிலிருந்து தப்பித்து இரணைமடுக் குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று பொலிஸாரால் கிளிநொச்சி நீதிவான் மன்றில் அறிக்கையிடப்பட்டது.
இந்தச் சம்பவம் 2011ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி மாலை இடம்பெற்றதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏனைய 4 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் பெரும் குற்ற வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்கள் இருவர், சுன்னாகம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 8 பொலிஸார் மீது சுமணனை சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டை தமது சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக முன்வைத்தனர்.
மல்லாகம் நீதிமன்றின் அப்போதைய நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் சந்தேகநபர்களின் குற்றச்சாட்டுத் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சித்திரவதை மற்றும் கொலை ஆகிய இரு பிரிவுகளில் வழக்குகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார். அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கும் நீதிவான் அறிவித்தல் வழங்கினார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்ட சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுப் பத்திரத்தை கிளிநொச்சி நீதிவான் மன்றில் முன்வைத்தனர்.
அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களத்தால் பொலிஸ் அதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 8 பொலிஸாருக்கு எதிராக 1994ஆம் ஆண்டு சித்திரைவதைகள் சட்டத்துக்கு அமைவாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் 2 பொலிஸார் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திசாநாயக்க முதியன்சேலாகே சின்தக நிசான்த பண்டார உள்ளிட்ட ஆறு முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்களும் மனித குலத்துக்கு எதிரான சித்திரவதைக் குற்றத்துக்கு குற்றவாளிகளாக காணப்பட்டு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதேவேளை கொலை வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தது. (தற்போது வழக்கின் நிலைமை தெரியவில்லை)

thanks

Sriramachandaran Mayutharan facebook post