ஆணுடன் பாலியல் தொடர்புடைய ஆண் குருதி வழங்க ஆஸ்திரேலியாவில் தடை!
ஆண் துணை உடைய ஆண்கள் குருதிக்கொடையில் ஈடுபடுவதற்கு ஆஸ்திரேலியாவில் புதுவிதமான தடையொன்று நடைமுறையிலிருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் கடந்த மூன்று மாதங்களில் பாலியல் ரீதியான தொடர்பு வைத்திருந்தால், அவர் குருதிக்கொடையில் ஈடுபட முடியாது என்று ஆஸ்திரேலியாவிலுள்ள செஞ்சிலுவை சர்வதேச குழுவின் குருதிக்கொடை அலகும் ஆஸ்திரேலிய குருதிக்கொடை அமைப்பும் பொதுவான கொள்கையை முன்வைத்திருக்கிறார்கள்.
தற்போதைய கோவிட் காலத்தில் ஆஸ்திரேலியாவில் குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விடுக்கப்பட்ட அறிவிப்பின் பின்னர், குருதிக்கொடையில் ஈடுபடுவதற்காக சென்ற சமபாலின உறவுமுறை கொண்ட ஒருவர், மேற்படி காரணத்தை காண்பித்து நிராகரிக்கப்பட்டுள்ளார். ஆணுடன் ஆண் கடந்த 12 மாதங்களில் பாலியல் தொடர்பில் ஈடுபட்டிருந்தால், குருதிக்கொடையில் பங்குபற்றமுடியாது என்றிருந்த கொள்கை, தற்போது மூன்று மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணுடன் ஆண் பாலியல் ரீதியான தொடர்பிலிருந்தால் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பது ஆஸ்திரேலியாவில் நிரூபிக்கப்பட்டிருப்பதால்தான், தாங்கள் இந்த இறுக்கமான கட்டுப்பாட்டினை கடைப்பிடிப்பதாக குருதிக்கொடை அமைப்பினர் காரணம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த வித்தியாசமான விதிமுறையானது சமபாலினத்தவர்களின் உரிமைகளுக்கு எதிரானது என்று ஆதரவாளர்கள் தங்களது கருத்தினை முன்வைத்திருக்கிறார்கள்.

