டெல்டாவுக்கு எதிராக கொவிட் தடுப்பூசியின் செயல்திறன் 91 இல் இருந்து 66% ஆக வீழ்ச்சி!
டெல்டா திரிபு வைரஸ் தீவிரத்தின் காரணமாக அந்த வைரஸூக்கு எதிராக கொவிட் 19 தடுப்பூசியின் செயல்திறன் குறைந்துள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா – டெல்டா உரு திரிபு வைரஸ் தீவிரமாகப் பரவலடையத் தொடங்கிய பின்னர் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியின் செயல்திறன் 91 இல் இருந்து 66% ஆக குறைந்துள்ளது அவதானிக்கப்பட்டுள்ளதாக நோயின் தன்மை மற்றும் இறப்பு விகிதம் குறித்து நோய் கட்டுப்பாடு மையம் வெளியிட்ட வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலபோக்கில் தடுப்பூசியின் செயல்திறன் குறைந்து அதன் பயன்பாடு குறித்த கேள்வி எழக்கூடும் என்பதால் இது குறித்து கவனமாக ஆராயப்பட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
டெல்டாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறன் குறைவதாக இடைக்கால ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது. எனினும் மூன்றில் இரண்டு பங்காக அதன் செயல்திறன் குறைந்திருப்பது கவலையாக மாறியுள்ளது.
டெல்டா வகை கொரோனா தீவிரமடையும் பட்சத்தில் தடுப்பூசியின் ஆற்றல் குறையும் என இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் நாடுகள் மேற்கொண்ட ஆய்விலும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

