கொரோனாவில் மரணமடைந்த மாமன்!! விபச்சார ஊடகங்கள் என கொதித்து எழுந்த மருமகன்!! யாழ் வல்வெட்டித்துறையில் நடந்தது என்ன??
வல்வெட்டித்துறை தெணியம்பையை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட,
கப்பற்துறை பொறியியலாளரான ( Marine Engineer), திரு. நடனசிகாமணி ஜெயவீரசிகாமணி (குட்டி ஐயா) என்பவர் கொரோனா நோய்க்கு இலக்காகி மரணமானார். அவரது மரணம் தொடர்பாக அவரது மருமகன் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
வாரத்திற்கு இரண்டு தடவை இரும்புச்சத்து மருந்தை ஊசிமூலம் ஏற்றிக்கொண்டிருக்கும்,
குருதிச்சோகை நோயும், சிறுநீரக செயலிழப்பு நோயும், நீரிழிவு நோயும் உடைய இளையமாமா,
கொரோனா தொற்றிற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாத நிலையில்,
தனக்கு ஏற்கனவே கொரோனா தொற்றி இருப்பது தெரியாமலே,
தனது வழமையான சிறுநீரக வைத்திய நிபுணரின் ஆலோசனைப்படி,
சினோபாம் முதலாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட நாளில் இருந்து,
உடற்சோர்வு, பசியின்மை, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டபோது,
இது தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட பக்கவிளைவாக இருக்கலாமென்ற எண்ணத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லாமல் இருந்துவிட்டு,
நான்கு நாட்களின் பின் வைத்தியசாலைக்கு செல்வதற்காக வாகனத்தில் ஏறுமுன் சடுதியாக உயிரிழந்தார்.
சட்டதிட்டங்களிற்கமைய உடலை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று பரிசோதித்தபொழுது கொரோனா தொற்றுறுதியாகியிருந்தது.
வல்வெட்டித்துறை சிவன் கோவிலின் தீவிர பக்தனான இளையமாமா கோவில் நிகழ்வுகள் மட்டுமல்லாது,
உறவினர் நண்பர்களது வீட்டு நிகழ்வுகள் எல்லாமே குறிப்பாக மரணச்சடங்குகள், அந்தியெட்டி, திவசம் என்பன முறைப்படி நடக்கவேண்டும் என்பதில் அதீத அக்கறைகாட்டுவார்.
வீட்டில் என்ன நிகழ்வுகள் என்றாலும் முன்னின்று நடாத்த இளையமாமா இருக்கிறார் என்ற துணிவோடு இருந்த எமக்கு,
இளையமாமாவே மரணித்ததும் யாரிடம் விறகு வாங்குவது, எரிப்பதற்கு யாரை கேட்பது, எப்படி மரணச் சடங்கை செய்வது, அதற்கு என்னென்ன பொருட்கள் வாங்கவேண்டும் என்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்தபோது,
எந்த சம்பிரதாயமான சடங்குகளும் இல்லாமல் முகத்தைக்கூட பார்க்கமுடியாது,
கவச உடையணிந்த சுகாதார ஊழியர்கள் எரிப்பதற்காக கொண்டுசெல்லும் படத்தை மட்டும் பார்த்துவிட்டு இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
தேவையான அளவு குடும்ப உறுப்பினர்கள் நின்று உடலை சட்டப்படி வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோதும்,
“வல்வெட்டித்துறையில் கொரோனா தொற்றுறுதியான ஒரு ஆணின் சடலம் வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது”. என்ற செய்தியை பல ஊடகங்களிலும் பார்த்தபோது,
ஊடகங்களில் வரும் செய்திக்கும் உண்மைக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்பது தெளிவாகத் தெரிந்தது.
“விபச்சார ஊடகங்கள்” என்று ரிசாட் பதியுர்தீன் பாராளுமன்றத்தில் கூறியதன் அர்த்தம் புரிந்தது.
கொரோனா என்பது முகநூலில் பதிவிடுவதற்கான ஒரு விடயப்பொருள் என்ற நினைப்பில் இருந்த எனக்கு,
இல்லை, கொரோனா என்பது ஓரு கொடிய ஆட்கொல்லி நோய் என்பது விளங்கியது.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த உற்சவத்தின் போது எருமைமாட்டு மூளையுடன் செயற்பட்டது போலல்லாது,
தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய உற்சவத்தின் போது, பீசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட, கோவிலுடன் நெருங்கிய தொடர்புடைய நூறுபேர் மட்டும் முறைப்படி திருவிழாவை நடாத்த,
ஏனையோர் தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் நேரலையாக பார்க்கட்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்த வடமராட்சியின் நிர்வாகத்துறை உத்தியோகத்தர்களும் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.
வீட்டின் வெளி வாசற்கதவில் தொங்கவிடப்படும் சுவையான உணவுகளை எடுத்து உண்டுகொண்டிருந்தாலும்,
சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், நீரிழிவு நோய்கள் கொண்டவர்களையும் முதியவர்களையும் கொண்டிருக்கும் எமது குடும்பத்திற்கு,
போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் கடற்படையினால் கடலிலிருந்து ஏவப்படும் ஷெல்கள் காட்டாத மரணபயத்தை,
“காப்பெற்பொம்மிங்” என்று எமது வீடு உட்பட ஊரையே தரைமட்டமாக்கிய விமானப்படை விமானக் குண்டு வீச்சு காட்டாத மரணபயத்தை,
வடமராட்சி ஒப்பிரேசன் லிபரேசனின்போது இலங்கை இராணுவம் காட்டாத மரணபயத்தை,
முன்னேறிவந்த இந்தியப்படையின் கைகளில் இருந்த துப்பாக்கிகள் காட்டாத மரணபயத்தை,
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது மத்தியவங்கி குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களின்போது சாமத்தில் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்படும் பொலிஸ் நிலையங்கள் காட்டாத,
மரணபயத்தை கொரோனா காட்டுகிறது.
நன்றி
Thirunavukkarasu Senthan

