உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகள் – நிர்ணயிக்கப்பட்ட திகதி யில் நடக்காது
க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன எதிர்வரும் அக்டோபர் மாதம் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் இடம்பெறாதென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பில் இருவேறு கருத்துக்கள் காணப்படுவதால் தொழில்நுட்ப அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படுமென தெரிவித்துள்ளார்.
முன்னதாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 3 ஆம் திகதியும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை அக்டோபர் 4 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் 2020 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் இடம்பெறாமையினால் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் செயன்முறை பரீட்சைகள் இடம்பெறுமெனவும் தெரிவித்திருந்தார்
அதேவேளை 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சையினை நடத்துவதற்கான திகதிகள் குறித்து தீர்மானிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பரீட்சைகள் தொடர்பில் மேலும் ஆராய்ந்த பின்னர் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

