புதினங்களின் சங்கமம்

யாழ்.பல்கலை பிரதம நூலகர் சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் மறைவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகர் திருமதி சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் (வயது -59) இன்று (டிசெ.25) வியாழக்கிழமை காலமானார்.

இணுவிலில் உள்ள இல்லத்தில் திடீர் மாரடைப்பால் அவர் காலமானர் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

இணுவிலில் பிறந்த இவர் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டதாரியானார்.  பெங்களூரில் தகவல் அறிவியல், ஆவணப்படுத்தலில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்டார்.

பத்தி எழுத்தாளர், கவிஞர், நூல் விமர்சகர் என பல்துறைகளில் சிறந்து விளங்கியதுடன், பெண்ணியியல்வாதியாகவும் செயற்பட்டார்.

நூலகத்துறை சார்ந்து “நூலக அபிவிருத்தி ஒரு பயில் நோக்கி”, “சொற்பொருளாய்வுக் களஞ்சியம் நூலகத் தகவல் அறிவியல்”, “நூலக தகவல் அறிவியல் ஆய்வுக்கோவை” உள்பட்ட நூல்களையும் படைத்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய பாவனைப் பொருள்களை சேமித்து தன்னுடைய வீட்டில் சிறிய அளவிலான ஆவணக்காப்பகம் ஒன்றையும் பேணிவந்திருக்கின்றார்.

பாரம்பரிய ஆவணங்களை சிறார்களுக்கு கண்காட்சிகள் ஊடாக காட்சிப்படுத்துவதிலும் அவர் அக்கறைகாட்டி வந்தார்.

விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளின் கல்விசார் நடவடிக்கைகளிலும் அவர்களின் எழுத்து வளர்ச்சியிலும் பிரதான பங்காற்றியவர்களில் ஒருவராக விளங்கிய திருமதி சிறீகாந்தலட்சுமி அருளானந்தம், வானதி பதிப்பகத்தின் ஊடாக பல நூல்களை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் ஜக்சன் லீமா.