யாழ்.இணுவிலில் பரபரப்பு: தோட்டக் காணியில் கூரிய வாள்கள் மீட்பு! (Photo)
இணுவில்- தாவடி மயான வீதியில் அமைந்துள்ள மரவள்ளித் தோட்டக் காணியொன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கூரிய நான்கு வாள்கள் இன்று சனிக்கிழமை(03) காலை மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி பகுதியில் அமைந்துள்ள மரவள்ளித் தோட்டக் காணியை தோட்ட உரிமையாளர் இன்று காலை துப்பரவு செய்த போது குறித்த வாள்கள் உரப்பையொன்றினால் சுற்றப்பட்ட நிலையிலிருப்பதைக் கண்டுள்ளார். இதனையடுத்துக் குறித்த விடயம் சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ஊடாகச் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற சுன்னாகம் பொலிஸார் குறித்த நான்கு வாள்களையும் அங்கிருந்து மீட்டுச் சென்றுள்ளனர்.
இதேவேளை, அண்மைக் காலமாக யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த வாள்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

