புதினங்களின் சங்கமம்

யாழில் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு செல்ல மறுத்த கொரோனா நோயாளர்களால் பதற்றம்!! இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது!!

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் கொரோனாத் தொற்றுறுதியான 10 பேரை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்ல சுகாதாரத் தரப்பினர் சென்றபோது செல்ல மறுத்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருவதால் இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுன்னாகம் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 10 பேருக்கு கொவிட்-19 தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து குறித்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிகள் அவர்களை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமக்கு கொரோனா தொற்று இல்லை. பரிசோதனை முடிவுகளை தாம் நம்பமாட்டோம் எனக் கூறி சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

தொற்றாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டதையடுத்து சுகாதாரத் துறையினரால் அவர்களுக்கு நிலமை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. எனினும் தொற்றாளர்கள் கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல மறுத்துவரும் நிலையில் இராணுவத்தினரிடம் அவர்களை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் தொற்றுக்குள்ளானவர்கள் தமக்கு கொவிட் தொற்று இல்லை எனவும் பரிசோதனைகளில் நம்பிக்கையில்லை எனவும் தெரிவித்து தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுவரும் அதேவேளை தங்களை வற்புறுத்தினால் உயிரை மாய்ப்போம் என்றும் எச்சரித்தனர்.

இதனையடுத்து தொற்றாளர்களை சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.