யாழில்முகக்கவசம் அணியாது பொலிஸாருடன் முரண்பட்ட ஊடகவியலாளருக்கு வழக்கு தாக்கல்
செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர் முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் இன்றி பிரதான வீதியில் சென்ற நிலையில் இடைமறித்த பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையினால் சிக்கல் நிலைமையை எதிர்நோக்கியுள்ளார். இன்று(5) யாழ்ப்பாணம் மாவட்டம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீதிச்சோதனை சாவடியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஊடகவியலாளர் தனது மோட்டார் சைக்கிளில் முதல்தர தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்காக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் இன்றி சோதனை சாவடியை கடந்து செல்ல மற்பட்டுள்ளார். இதனை அடுத்து வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த ஊடகவியலாளரை இடைமறித்து முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் தொடர்பில் வினவியுள்ளனர்.இதன் போது அவ்வூடகவியலாளர் தன்னை இடைமறித்த பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தன்னை பகைத்தால் பொலிஸ் உயர் அதிகாரிகளை கொண்டு இடமாற்றம் வழங்குவதாக அச்சுறுத்தியுள்ளார். குறித்த ஊடகவியலாளரின் செயலினால் தங்கள் பணிக்கு இடையூறு ஏற்பட்டதாக தெரிவித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளதுடன் சம்பவ இடத்தில் காணொளி ஒன்றினையும் ஆதாரமாக எடுத்துள்ளனர். தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட குறித்த ஊடகவியலாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து வழக்கு தாக்கல் மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

