யாழ்ப்பாணத்தில் இதுவரை தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இதுவரை தடுப்பூசி போட்டவர்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் பதிவாகவில்லை. பாதகமான விளைவுகள் எதுவும் பதிவாகவில்லை என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சினோபாம் தடுப்பூசிகள் முன்னிலை கிடைத்த 50,000 தடுப்பூசிகள் ஞாயிற்றுக் கிழமை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
சினோபாம் தடுப்பூசியானது நோய் ஏற்படுத்த முடியாத செயலிழக்கச் செய்யப்பட்ட கோவிட் -19 வைரசைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அத் தடுப்பூசியானது எமது உடலில் செலுத்தப்பட்டவுடன் கொவிட் – 19 வைரசிற்கெதிரானா பிறபொருள் எதிரிகளை எமது உடலின் நீர்ப்பீடனத் தொகுதி உற்பத்தி செய்வதற்குரிய பொறிமுறையை உருவாக்கும். இவ்வாறு பழக்கப்பட்ட எமது நீர்ப்பீடனத் தொகுதியானது செயற்திறன் உள்ள நோயை உருவாக்கும் வைரஸ் தொற்றும் போது அதற்கெதிராக செயற்படும். பிறபொருளெதிரிகளை உருவாக்கி உடனடியாக அவ் வைரசை அழிக்கும்.
இதன் மூலம் எமக்கு நோய் ஏற்படுவது அல்லது நோயினால் ஏற்படும் பாதிப்புக்கள் அற்றுப்போகின்றது.
இதுவரை உலகம் முழுவதும் 180 கோடி மக்கள் இக் கோவிட் -19 நோய்கெதிராக ஏதாவது ஒரு வகை தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். சினோபாம் தடுப்பூசியானது சீனாவின் சனத்தொகையில் 67 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இத் தடுப்பூசியானது இலங்கையுடன் சேர்த்து இதுவரை 69 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையிலும் 15 இலட்சம் மக்கள் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியினை பெற்றுக் கொண்டுள்ளனர். அதில் 6 இலட்சம் பேருக்கு சினோபோம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தயங்காது அச்சப்படாது பயப்படாது தமக்குரிய தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

