இலங்கையில் அமிலமழை பெய்யும் அபாயம் – இலங்கை சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை எச்சரிக்கை!
தீப்பற்றியுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய இரசாயன மற்றும் ஏனைய பொருட்கள் தென்னிலங்கையின் மேலும் சில கரையோரங்களில் ஒதுங்கியிருக்கின்றன. இதனால் சில பிரேதேசங்களில் அமில மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக ஸ்ரீலங்கா சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
வத்தளை – ப்ரீதிபுர முதல் நீர்கொழும்பு வரையான கடற்கரையில் கப்பலில் இருந்த இரசாயன சிதைவுகள் மற்றும் சில பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.
இந்த சம்பவத்தினால் நாட்டில் வளிமாசடைவு ஏற்படாது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
குறித்த கப்பலிலிருந்து வெளியேறிய எரிப்பொருள் கடலில் கலந்தமையினால் ஏற்படக்கூடிய அபாயம் மற்றும் கடலுணவுகளை உட்கொள்வது தொடர்பில் நாரா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அது தொடர்பில் பதிலளித்த அந்த நிறுவனத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சாமலி வீரசேகர,
தற்போதைய நிலையில், கடந்த 5, 6 நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை என்பதால், தற்போது எவ்வித பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், மீன்களின் மாதிரிகளைப் பெற்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய இரசாயன மற்றும் ஏனைய பொருட்கள் காரணமாக தென்னிலங்கை பிரதேசங்களில் அமில மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தீ பற்றியுள்ள ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் இருந்து விழும் கொள்கலன்கள் மற்றும் பிற பாகங்கள் திக்கோவிட்ட முதல் சிலாபம் வரையான கடற்கரைப்பகுதிக்கு மிதந்து வரும் நிலையில் அவற்றை தொடுவதையோ, அவற்று அருகில் செல்வதையோ தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
கப்பலில் இருந்து கடலுக்குள் விழும் கொள்கலன்களில் தோல் நோய் மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய நச்சு, இரசாயனப் பொருட்கள் இருப்பதாகவும் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

