புதினங்களின் சங்கமம்

சாய்ந்தமருதில் தப்பிய சஹ்ரானின் மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம் இதோ!!

கிரியுல்ல பகுதியிலுள்ள கடையொன்றிலிருந்து ஒன்பது வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்தது நானே என சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சஹ்ரானின் மனைவியை நேற்று விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைக்கு உட்படுத்தியபோதே அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில்,

கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரியான மொஹமது ஹஸ்துன் என்பவரது மனைவியான சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரனின் அறிவுறுத்தலுக்கமையவே ஏப்ரல் 19 ஆம் திகதி ஒன்பது வெள்ளை நிற மேற்சட்டைகள், பாவடைகள் மற்றும் உள்ளாடைகளை கொள்வனவு செய்ததாக அவர் கூறினார்.

“உனக்கு எதிர்காலத்தில் இது தேவைப்படும்,” என சாரா கூறியதன் காரணமாகவே தான் அவற்றை கொள்வனவு செய்ததாகவும் பாத்திமா பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

அந்த வெள்ளைத் துணிகளை வாங்கச் சொன்னதற்கான காரணம் சாராவுக்கு மட்டுமே தெரியுமென அவர் தெரிவித்திருந்த போதும், சாரா ஏப்ரல் 26 ஆம் திகதியன்று கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தனது கணவர் சஹ்ரான் அவரது மதத்துக்காக உயிரை மாய்த்துக் கொள்வேன் என அடிக்கடி கூறி வந்தாலும் அவர் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்துவாரென தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் பாத்திமா பொலிஸாரிடம் தெரிவித்தார்.

அத்துடன் அவர் தனது கணவரை கடந்த 19 ஆம் திகதி சம்மாந்துறைக்குச் செல்லும் வழியிலேயே கண்டதாகவும் அதன்போதே வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்ததாகவும் அவர் கூறினார்.

இறுதியாக தனது கணவரை சந்தித்த தினத்தன்று சஹ்ரான் அவரிடம் ஒரு பை நிறைய பணத்தை கையளித்ததாகவும் அதில் சாய்ந்தமருது செல்வதற்கு வேனுக்கு செலுத்த வேண்டிய பணம் இருப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

பின்னர் பாத்திமா, அந்த பணத்திலிருந்தே 29 ஆயிரம் ரூபாவுக்கு வெள்ளை நிற துணிகளை கொள்வனவு செய்ததாகவும் ஆனால் அப்பையில் மொத்தமாக எவ்வளவு பணம் இருந்ததென தனக்குத் தெரியாதென்றும் கூறினார்.

வத்தளை, கொள்ளுப்பிட்டி, கல்கிசை, பாணந்துறை, கட்டான ஆகிய பிரதேசங்களிலுள்ள பல வீடுகளில் தான் தங்கியிருந்ததாகவும் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் தான் நிந்தவூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்ததாகவும் பாத்திமா பொலிஸாரிடம் கூறினார்.

சம்மாந்துறையில் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து பொலிஸார் தங்களைத்தேடி நிந்தவூருக்கு வரலாம் என்ற அச்சம் காரணமாகவே ஏப்ரல் 26 ஆம் திகதி அந்த வீட்டை விட்டு அவர்கள் வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர் சஹ்ரானின் இரண்டு சகோதரர்கள், சகோதரி, அவருடைய கணவர்,பெற்றோர் மற்றும் பிள்ளைகளுடன் தானும் நிந்தவூரிலிருந்து வேன் ஒன்றின் மூலம் கல்முனையிலுள்ள சாய்ந்தமருதை வந்தடைந்ததாகவும் அவர்கள் அங்கு வந்து சிறிது நேரத்துக்குள்ளாகவே அங்கு குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.