புதினங்களின் சங்கமம்

கொரோனா வைரஸ் சீனாவின் உற்பத்திதானா? அமெரிக்க உளவுத் துறையிடம் சிக்கிய ஆதாரங்கள்!

கொரோனா வைரஸ் சீனாவின் உற்பத்தி தான் என்பதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க உளவுத்துறையிடம் புதிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் கொரோனா தொற்று வெளிப்படுத்துவதற்கு சில மாதங்களுக்கு முன், சீனாவின் வுஹான் நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் பணியாற்றும் மூன்று ஆராய்ச்சியாளர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது அந்த ஆவணத்தில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த அறிக்கையில், பாதிக்கப்பட்ட ஆய்வாளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நேரம் மற்றும் அவர்களின் மருத்துவமனை வருகைகள் பற்றிய புதிய விவரங்களும் இடம்பெற்றிருப்பதால் வுஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கும் என்பதற்கான வலுவான ஆதாரமாக இந்த அறிக்கை கருதப்படுகிறது.

‘இது கொரோனா வைரசின் தோற்றம் குறித்த, உலக சுகாதார அமைப்பின் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்’ என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியுள்ளது என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து கூறிவருகின்றன.

இது குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய வல்லுநர் குழு கடந்த பெப்ரவரி மாதம் சீனாவுக்குச் சென்றது. எனினும் கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில்தான் உருவானது என்பதற்கான ஆதாரம் இல்லை என அந்தக் குழு கூறியிருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என வெள்ளை மாளிகை தலைமை மருத்துவ ஆலோசகரான டாக்டர் அந்தோனி பாசி கருத்து வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் எவ்வாறு தோன்றியது? என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் கிடைக்கவில்லை. எனினும் கொரோனா வைரஸ் இயற்கையாகவே உருவானதாகக் கூறப்படுவதை என்னால் நம்பமுடியவில்லை. இதுகுறித்த வெளிப்படையான விசாரணை வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவா் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.