புதினங்களின் சங்கமம்

யாழ் சுன்னாகத்தில் வைரவர் ஆலயத்தின் முன் எரிந்த நிலையில் சடலம்!!

யாழ்.சுன்னாகம் கொத்தியாலடி சுடலை வைரவர் ஆலயத்தின் பின்புறமாக எரிவடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை(20) காலை கண்டறியப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தனது அண்ணன் செல்லையா பத்மநாதன் என அவரது சகோதரி சம்பவ இடத்திற்குச் சென்று அடையாளம் காட்டியுள்ளார்.

சுன்னாகம் கொத்தியாலடி சுடலை வைரவர் ஆலயத்தின் பின்புறமாக எரிந்த நிலையில் இனம்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை(20) காலை கண்டறியப்பட்டமையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள சி.வை.ரி.சி வாலிபர் அபிவிருத்தி நிலையத்தின் முன்பாகப் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளியில் இன்று அதிகாலை வேளையில் குறித்த முதியவர் தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்ட காட்சிகள் பதிவாகியுள்ளது. சடலத்திற்கு அருகில் பெற்றோல் கான் ஒன்றும் கண்டெடுக்கப்பட்ட நிலையில் குறித்த முதியவர் தனக்குத் தானே பெற்றோல் ஊற்றிய பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகப் பிரிந்து குறித்த முதியவர் தனது சகோதரி வீட்டில் சுமார் பத்து வருடங்கள் வாழ்ந்து வந்துள்ளதுடன் அதன்பின்னர் தனது உறவினர்களின் வீடுகளில் மாறி மாறி வாழ்ந்து வந்த அவர் சுன்னாகம் சந்தைக் கடைத் தொகுதியில் தனியாக கடந்த பல மாதங்களாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீண்டகாலம் தனித்து வாழ்ந்து வந்த குறித்த முதியவர் மனவிரக்தியில் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்திருக்கலாம் என அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த முதியவர் தனது இளம் வயதிலும், பின்னர் நடுத்தர வயதிலும் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் அவரது குடும்ப உறவுகளால் காப்பாற்றப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.