புதினங்களின் சங்கமம்

பல்கலைக்கழகங்கள், கல்விநிலையங்கள் உட்பட அனைத்தும் மூடப்படுகின்றன!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலின் 3-ஆம் நிலை ஆபத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டல்கள் மே 31 வரை அமுலில் இருக்கும் என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கோவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டல்களில் பிரகாரம் அத்தியாவசிய சேவைகளைத் தவிர வீட்டை விட்டு வெளியேற இரண்டு பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும்.

திருமண நிகழ்வுகளில் ஆகக் கூடியது 150 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மரண வீட்டில் பங்கேற்க 25 பேருக்கு மட்டுமே அனுமதி.

பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிலையங்கள் உட்பட பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என்பவனவும் தடை செய்யப்பட்டுள்ளன.

தமிழ்-சிங்கள புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகரித்துள்ள நிலையில் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி சூதாட்ட மையங்கள், இரவு களியாட்ட விடுத்திகள், மசாஜ் நிலையங்கள் மற்றும் கடற்கரை விருந்துகளும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

சிறுவர் பூங்காக்கள் மூடப்படும். திருவிழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் தடை அமுலில் இருக்கும். அத்துடன், நீச்சல் தடாகங்களும் மே 31 வரை மூடப்பட வேண்டும்.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும்படி கோரப்பட்டுள்ளது.

அத்துடன், வணிக வளாகங்கள அவற்றின் மொத்த திறன் வரம்பில் 50 வீதத்தினரை மட்டுமே ஒரே நேரத்தில் அனுமதிக்க முடியும்.

பகல் பராமரிப்பு மையங்கள், முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகள் 50 சதவீத திறனுடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.