யாழ். குடாவில் ஒரே நாளில் அதிகூடிய தொற்று: மொத்த தொற்று ஆயிரத்தை நெருங்கியது!
யாழ். குடாவை அச்சுறுத்தும் புதிய சந்தைக் கொத்தணி தொற்று காரணமாக இதுவரையான நாட்களில் என்றும் இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகூடிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி பொதுச் சந்தை கொத்தணியில் நேற்றைய தினம் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், யாழ். குடாநாட்டில் 143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து திருநெல்வேலி சந்தைக் கொத்தணியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.
யாழ். நவீன சந்தை கொத்தணியில் 75 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இரு சந்தைக் கொத்தணி தொற்றாளர்களது எண்ணிக்கை 228 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் யாழ். மாவட்டத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 989 ஆக அதிகரித்து ஆயிரத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
