வடமராட்சி கிழக்கில் தொடர் திருட்டு: கரைவலை மடிகள், கால்நடைகள் திருடப்பட்டன!
யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் ஒரே இரவில் மேற்கொள்ளப்பட்ட தொடர் திருட்டில் கரைவலை மடிகள், கால்நடைகள் என்பன திருடப்பட்டுள்ளதாக அருவி இணையத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடமராட்சி கிழக்கு, பொற்பதி குடத்தனை கிராமத்தில் நேற்று இரவு தொடர் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜே-421 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொற்பதி குடத்தனை கிராமத்தில் இடம்பெற்ற இததொடர் திருட்டு சம்பவத்தில் ஆறு கரைவலை மடிகள் களவாடிச் செல்லப்பட்டுள்ளன.
நான்கு மீனவர்களுக்கு சொந்தமான ஆறு கரைவலை மடிகள் இவ்வாறு அடையாளம் தெரியாத நபர்களால் களவாடிச் செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த குட்டித்தாச்சி ஆடு ஒன்று திருட்டுக் கும்பலால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு பிறிதொரு வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகளும் களவாடிச் செல்லப்பட்டுள்ளது.
ஒரே இரவில் இடம்பெற்றுள்ள இத் தொடர் திருட்டு சம்பவத்தையடுத்து பொற்பதி குடத்தனை கிராமத்தில் வசிப்போரிடையே தமது உடமைகள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதாக அருவி இணையத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இத் தொடர் திருட்டுச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டினை பதிவு செய்வதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
