குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சின்னங்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை; மூத்த பேராசிரியர் சி.பத்மநாதன்!

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சின்னம் 2ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சின்னத்தில் உள்ள தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன என்று யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் மூத்த வரலாற்றுத்துறை பேராசியருமான சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்தமை வருமாறு,

குருந்தூர் மலையில் உள்ள இப்பொழுது பேசப்படுகின்ற சின்னங்கள் சிலர் பல்லவர் காலத்துக்கு உரியன என்று சொல்கின்றனர். பல்லவர் காலத்துக்கும் இந்தச் சின்னங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இவை அந்தக் காலத்துக்கு மிக முற்பட்டனவாகும்.

அங்கு செங்கட்டிகளால் அமைக்கப்பட்ட ஒரு சிறிய கட்டிடத்தின் இடிபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. பார்ப்பவர்கள் எவருக்கும் இது புலனாகும். அந்தக் கட்டடத்தினுள் சற்று முன்புறமாக ஒரு வெள்ளைக் கல்லில் அமைந்த ஒரு உருவம் தெரிகிறது. அதில் பௌத்த படிமம் போல எதுவும் காணப்படவில்லை. ஆதி காலத்து தொல்பொருள் சின்னங்களில் அனேகமானவை நாகர்களோடு தொடர்புடையவையாகும்.

நாகர்கள் வழிபட்ட சிவலிங்க வடிவங்கள் பனங்காமம் தொடக்கம் ஓமந்தை போன்ற இடங்களிலே பெருமளவிலே காணப்படுகின்றன.

இங்கே காணப்படுவது சிவலிங்க வடிவம் என்று கொள்வது சாலவும் பொருந்தும். இதைத்தான் வேறு ஆய்வாளர்களும் சொல்லியுள்ளார்கள். அது சிறிய கட்டிடத்தில் அமைந்திருப்பது இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது.

அதில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. நாகர்களுடைய கடவுள் பெயர் அதிலே காணப்படுகின்றது.

அந்த லிங்கத்திலே மணி நாகன் என்ற பெயர் தெளிவாகத் தெரிகின்றது. அது மட்டுமன்றி வேள் நாகன் என்ற பெயரும் அதிலே காணப்படுகின்றது. வழமையாக கடவுள் சின்னங்களிலும் கடவுள் பெயரை எழுதுவதோடு அதை தாபனம் பண்ணியவர்கள் அல்லது நன்கொடை செய்பவர்களுடைய பெயரை எழுதுவது வழமை நாகர்களுடைய வழமைப்படி வேள் நாகன் என்று தான் அது எழுதப்பட்டிருக்கிறது.

வழிபாட்டிச் சின்னங்கள் எல்லாவற்றிலும் அவர்கள், கடவுள் பெயர்களை தமிழ்ப் பிராமி வடிவங்களிலே பொறித்தார்கள். சிவலிங்கம், புத்தர் படிமம், நந்தி, மயூரம், பூசகம் முதலிய எல்லாவற்றிலும் இந்தக் கடவுள்ப் பெயர் காணப்படும்.

சின்னத்தின் அடிப்படையிலே தான் அது எந்த வழிபாட்டு மரபுக்கு உரியது என்பது நிர்ணயிக்கப்படும்.

இங்கு காணப்படுவது சிவலிங்கம். அதிலே காணப்படுகின்ற எழுத்துக்களைக் கொண்டு பார்க்குமிடத்து இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கொள்ளத் தக்கது. சில சமயங்களில் இலங்கையில் வட்டெழுத்து மரபு பரவியிருக்காததனாலே தமிழ்ப் பிராமி வரி வடிவங்கள் தொடர்ந்தும் சில நூற்றாண்டுகளாக நிலைபெற்றிருந்திருக்கின்றன.

ஆனால் இந்த வடிவத்தைப் பொறுத்தவரையில் இது சர்ச்சைக்குரிய வடிவமன்று. உறுதியாகச் சொல்லக்கூடியது என்னவென்றால் இது ஒரு பழங்காலத்து லிங்க உருவம். லிங்க உருவத்தின் ஆரம்பகால வடிவமைப்பினை பிரதிபலிக்கின்ற வடிவம். நாகர்களின் கடவுள் பெயர் எழுதப்பட்டுள்ள வடிவம், சைவ சமய சின்னமாக அது அமைகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)