யாழ் சண்டிலிப்பாயில் அழுகிய உணவுகள் வைத்திருந்த சாப்பாட்டுக்கடைக்கு சீல்!! Photos
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, 73 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ள நீதிமன்று , குறித்த உணவகத்தையும் சீல் பண்ணுமாறு உத்தரவிட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பகுதியில் பொது சுகாதார பரிசோதகரான செ. பிரின்சன் தலைமையில் உணவகங்களில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , 180 கிலோ பழுதடைந்த ரொட்டிகள் , 05 கிலோ இடியப்பம் மற்றும் 08 கிலோ பிட்டு என்பவற்றை பொலித்தீன் பைகளில் கட்டி குளிர்சாதன பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.
குறித்த உணவகத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் . உணவாக உரிமையாளருக்கு 73ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவகத்தை சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டது.
அதேவேளை பழுதடைந்த இறைச்சி மற்றும் இறால் ஆகியவற்றை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த உணவக உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டமும் , பழுதடைந்த இறைச்சி றொட்டியை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் உணவகத்தை சுத்தமின்றி பேணிய மற்றுமொரு உணவக உரிமையாளருக்கு 33 ஆயிரம் ரூபாய் தண்டமும் நீதிமன்று விதித்துள்ளது.
அதேவேளை மல்லாகம் நீதவான் நீதிமன்று நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட 06 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் சுமார் 03 இலட்ச ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ள நிலையில் , சில உணவகங்களை சீல் வைத்து மூடுமாறும் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.