இலங்கை மீண்டும் முடக்கப்படுமா? உருமாறிய கொரோனா தீவிரம்: நாளை இறுதித் தீர்மானம்!
இலங்கையில் வேகமாகப் பரவக்கூடிய கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதன் பரவலைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய வைரஸ் இலங்கையில் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் அவா் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போதே அவா் இவ்வாறு கூறினார்.
புதிய வைரஸ் விரைவாகப் பரவி அதிகளவில் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் நாடு முழுவதும் சமூக முடக்கல் அமுல் செய்யப்படலாம் என்ற ஊகங்கள் பரவி வருகின்றன. எனினும் அது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இலங்கையில் புதிய வகை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவா் கூறினார்.
வேகமாகப் பரவும் SARS-CoV-2 பரம்பரையைச் சேர்ந்த B1.1.7 புதிய வகை கொரோனா வைரஸ் வவுனியா, கொழும்பு, அவிசாவளை, பியகம பகுதிகளிலும் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளின் மாதிரிகள் பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆபத்தான புதிய திரிவு வைரஸ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் டாக்டர் சந்திமா ஜீவந்தர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உருமாறிய புதிய கொரோனா வைரஸின் அதிதீவிர பரவலுக்கு மத்தியில் நாடு தழுவிய முடக்க நிலையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்ற போதிலும் நாளை கொரோனாத் தடுப்புப் பற்றிய தேசிய செயற்பாட்டு நிலையம் சந்திக்கும்போது இது குறித்து ஆராயப்படும் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“நாடு தழுவிய முடக்கநிலையைக் கொண்டுவருவது தொடர்பாக எந்தவிதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், கொரோனாப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் நாளை கூடும்போது இந்த விடயம் தொடர்பாகப் கலந்துரையாடப்படும்” என்று பொலிஸ் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சுகாதார திணைக்களத்தின் தொற்றுநோயியல் பிரிவு தற்போதைய நிலைமையை ஆராய்ந்து வருகின்றது எனவும், மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பாக தீர்மானிக்கும் எனவும் பொதுச் சுகாதார சேவைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி கணக்கெடுப்பில் இலங்கையில் 33 ஆயிரத்து 472 கொரோனாத் தொற்றாளர்கள் மொத்தமாக இனங்காணப்பட்டிருந்தனர். அது முதல் இன்று பெப்ரவரி மாதம் 14ஆம் வரையான இரண்டு மாத காலப்பகுதியில் பதிவான மொத்தத் தொற்றாளர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தால் அதிகரித்து இதுவரை இலங்கையில் பதிவான மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 852 ஆக அதிகரித்திருக்கின்றது. இலங்கையில் மேல் மாகாணத்தில் ஒரு பகுதி பாடசாலைகளை நாளை 15ஆம் திகதிமுதல் மீள ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டிருந்தபோதும் அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் பதிவாகி வருவதன் காரணமாக அந்தத் தீர்மானம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய வகை இலங்கையிலும் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

