கிசு கிசு

அண்ணா கரண்ட் அடிக்காதீக‘ கொடூர வல்லுறவுக்குப் பின் மின்சாரம் செலுத்தி கொல்லப்பட்ட சிறுமி!!

பொள்ளாச்சி பாலியல் கொடுமையை மிஞ்சும் அளவிற்கு ஒரு மாணவ சிறுமியின் பாலியல் பலாத்கார படுகொலை நெஞ்சை பதறவைத்து இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் அருகே இருக்கும் ஜி.குரும்பபட்டியை சேர்ந்த வெங்கடாசலம் – லட்சுமி தம்பதிக்கு பிறந்த 12 வயது சிறுமி கலைவாணி வடமதுரையில் உள்ள கலைமகள் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது விடுமுறை என்பதால் மாணவி கலைவாணி வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தான் கடந்த 16 ம்தேதி மாணவி கலைவாணி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். அப்படி இருந்தும் காக்கிகள் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வந்ததால் பாதிக்கப்பட்ட கலைவாணி குடும்பத்தினர் எஸ்பி சக்திவேலிடம் முறையிட்டதின் பேரில் மாணவி கலைவாணியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த காமக்கொடூரனான
பிளஸ்டூ மாணவன் கிருபானந்தனை காக்கிகள் கைது செய்தனர். அப்படி இருந்தும் மேலும் சில குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் எனக்கோரி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வடமதுரையில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில் கலைவாணி குடும்பத்தாருடன் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பெரும் திரளாகவே கலந்து கொண்டனர்.

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் தாக்கி படுகொலை செய்யப்பட்டது எப்படி என்பதை அறிய ஜி.குரும்பபட்டிக்கு சென்று பாதிக்கப்பட்ட கலைவாணியின் தாய் லட்சுமியிடம் கேட்டபோது….. ஏழு வருடமாக தவமிருந்து பெத்த ஒரே மகளான கலைவாணியை பறிகொடுத்துவிட்டு தவித்து போய் நிற்கிறங்க சாமி. சம்பவத்தன்று மதியம் என் மகளைக் கூட்டிக்கொண்டு போய் ரேஷன் கடையில் அரிசியை வாங்கி வந்து வீட்டில் வைத்து விட்டு 100 நாள் வேலைக்கு சென்றேன்.

அப்பக்கூட வாம்மா என்னோட வேலை செய்யற இடத்துல வந்து உட்கார்ந்துக்க அம்மா என்று கூப்பிட, அதற்குக்கூட வேணாம்மா நான் வீட்டிலேயே டிவி பார்த்துகிட்டு சூதானமா இருக்கிறேன் என்று கூறியதை கேட்டுத்தான் நானும் என் மகளை வீட்டில் விட்டுவிட்டு போய் வேலையை முடித்து விட்டு, மாலை வந்து வீட்டுக்குள் பார்த்த போது வீடு திறந்து கிடந்தது. உள்ளே கோழிக்குஞ்சுகள் எல்லாம் மேய்ந்துகொண்டிருந்தது.

அதையும் தாண்டி ரூமை திறந்து பார்த்தபோது அங்கங்கே ரத்தம் கிடந்தது. அதன் அருகே அலங்கோலமாக என் மகள் கிடந்ததை கண்டு கதறித் துடித்த வாரே என் மகளை பார்த்த போது வாயிலையும் மூக்குலயும் மின்சாரக்கம்பி சொருகி அதனுடைய வயர் அருகிலிருந்த பிளக்கில் மாட்டி இருந்ததின் மூலம் தீ கங்கும் வந்து கொண்டிருந்தது. உடனே சுச்சு போர்டை ஆப் பண்ணி விட்டு என் மகளின் மூக்கிலும் வாயிலும் இருந்த வயர்களை உருவ முடியாமல் கஷ்டப்பட்டு உருவி விட்டு என்மகளை தூக்கிய போது தலை எல்லாம் ரத்தமாக இருந்தது

அந்த அளவுக்கு அந்த படுபாவி என் மகளை சீரழித்து விட்டு தலையில் முட்டியும், போர்வையை முகத்தில் போட்டு அமுக்கியும் கூட என் மகள் உயிருடன் தான் இருந்து இருக்கிறாள். அதன் பிறகு தான் அந்த படுபாவி, அருகே கிடந்த டீப் லைட்டில் இருந்த வயரை உருவி கரண்ட் ஷாக் கொடுத்து என் தங்க மகளை கொலை செய்து விட்டு ஓடிவிட்டான். இப்படி என் பிள்ளைக்கு நடந்த கொடுமை இனி எந்த பிள்ளைக்கும் நடக்க கூடாது. அந்த படுபாவிக்கு நல்ல தண்டனை கிடைக்க வேண்டும்’’ என்று கண்ணீர் மல்க கூறினார்.

கலைவாணியின் தந்தை நம்மிடம் பேசியபோது, ‘’ நான் வடமதுரையில் சலூன் கடை வைத்து இருக்கிறேன். திடீரென என் மனைவி போன் போட்டு, மாமா நம்மை விட்டு பிள்ளை போய்ட்டா மாமா.. என்று சொன்னதை கேட்டவுடனே பதறியடித்துக் கொண்டு ஊருக்கு போய் என் மகளை பிணமாகத் தான் பார்த்தேன். அதற்குள் வடமதுரை
போலீஸ் வந்து பாடியை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்படி இருந்தும் நாங்கள் என் மகள் சாவில் சந்தேகம் இருக்கிறது என்று கூறியும் கூட அதை கண்டுகொள்ளாமல் குடும்ப பிரச்சனை ஏதும் இருக்கிறதா என்று எங்களிடம் கேட்டுக் கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் டென்ஷன் அடைந்த எங்கள் உறவினர்கள் என் மகள் சாவில் மர்மம் இருக்கிறது என்று கூறி ஆஸ்பத்திரி முன்பாக மறியலில் ஈடுபட்டனர். அதன்பின் எஸ்பியிடம் புகார் கொடுத்ததின் அடிப்படையில் தான் டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் போலீசார் வந்து விசாரணை செய்தனர். அப்பொழுது என் எதிர் வீட்டில் இருக்கும் பிளஸ் டூ மாணவனான கிருபானந்தம் தினசரி இரண்டு மூன்று பையன்களோடு வந்து தண்ணி அடித்துவிட்டு போவான் என்பதால் அவன் மேல் எனக்கு சந்தேகம் இருக்கிறது என்று கூறினேன். அதன் அடிப்படையில்தான் போலீசார் அவனை பிடித்து விசாரித்து போது உண்மையை சொல்லி இருக்கிறான்,

அதுலயும் ரத்த கரைந்த துணிமணிகளும் அவன் வீட்டில் இருந்ததை போலீசார் கைப்பற்றி அவனிடம் விசாரித்த போது, “என் மகள், அண்ணா… விட்டுங்க அண்ணா …கரண்டு எல்லாம் வைக்காதீங்க” என்று கதறி துடித்தாள் என்று கூட அவன் வாக்கு மூலமாக சொல்லி இருக்கிறான்.

அப்படி இருந்தும் மனசாட்சி இல்லாத காட்டு மிருகம் என் மகளை வேட்டையாடி விட்டது. ஆனால் அந்த கொலைகாரனின் நண்பர்களான ஜெயபிரகாஷ் மற்றும் டிராவிட்டுக்கும் என் மகள் கொலையில் சம்மந்தம் இருக்கு. அப்படி இருந்தும் போலீசார் எதிர் தரப்பிடம் பணத்தை வாங்கிக்கிட்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் வருத்தமாக இருக்கிறது’’ என்றார் மாணவி கலைவாணியின் தந்தையான வெங்கடாசலம்.இது சம்பந்தமாக கலைவாணிக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலபாரதியிடம் கேட்டபோது…… இச்சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. சினிமாவை மிஞ்சும் அளவிற்கு காட்டுமிராண்டித்தனமாக அந்த பச்ச குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் போலீசார் பெயருக்கு ஒருத்தரை மட்டும் கைது செய்து விட்டு வழக்கை மூடி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் அந்த காமக் கொடூரனுடன் மேலும் சில பேருக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் போக்கோ சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்ய‌ வேண்டும்.

அப்படி செய்தால் தான் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் குடும்பத்திற்கு மத்திய அரசு 25 லட்சம் நிவாரண உதவி வழங்க முடியும். அதைவிட்டு, போலீசார் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படலாம் என்று நினைத்தால் அது தற்கொலைக்கு சமம். அதற்கு பேசாமல் பால்டாயிலை வாங்கி குடித்து விட வேண்டியது தான். தற்போது ஜி.குரும்பட்டி மக்களை மட்டும் திரட்டி போராட்டம் நடத்தி இருக்கிறோம்.

இன்னும் ஒரு வாரத்தில் அந்த மாணவி படுகொலைக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்ய வில்லை என்றால் மாவட்ட அளவில் மக்களை திரட்டி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இதே வடமதுரையில் மிகப்பெரிய மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று கூறினார்.

12 வயது மாணவி கலைவாணி மின்சாரம் தாக்கி பாலியல் படுகொலை செய்யப்பட்டது மாவட்ட அளவில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.