புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சேர்! என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்! கனடா ஈழ…..

ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை. எனக்கே கல்யாணம் கட்டும் வயதில் பிள்ளைகள் இருக்கும் போது நான் காதலித்தவளுக்கு இருக்காதா என்ற எண்ணமே அவன் மனம் முழுவதும் வியாபித்து இருந்தது.
கோவில் உட்பிரகாதத்தை சுற்றி வரும் போது அவள் மூன்று முறை திரும்பிப் பார்த்துவிட்டாள் கூட வந்தவர்களுக்குத்; தெரியாமல். அவள் கதைக்க விரும்புகிறாள் என்பதை இதழ் ஓரத்தில் தோன்றி மறைந்த புன்னகை இருமுறை சொல்லிக் காட்டிவிட்டது. ஆனால் அந்தப் புன்னகையைத் தொடர்ந்து ஓரக் கண்கள் பயத்துடன் கணவனையும் பார்த்துக் கொண்டதையும் சத்யா கவனிக்கத் தவறவில்லை.
அவன் எழுந்து வரமாட்டான் என்று சத்யாவுக்குத் தெரியும். முச்சக்கர வண்டியில் இருந்து கொண்டு தாயுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான் அந்தக் கணவன். கால் பழுது பட்டிருக்க வேண்டும். கவலையோடு மகனின் காலைத் தடவிக் கொண்டிருந்தாள் அந்த அம்மா. அவர்கள் கவலை அவர்களுக்கு.
நீங்கள் சத்யன் மாஸ்டர் தானே? என்னை உங்களுக்குத் தெரிகிறதா நான் மேகா. நீலமேகலா. உங்களிடம் எண்பதாம் வருடம் வன்னியில் இருந்து வந்து தமிழ் படிச்சனான் மாஸ்டர்.
பெருமாள் சன்நிதியின் பின் புறத்தில் யாரும் காணாத ஒதுக்குப் புற ஒற்றை வழியில் எவரும் வராத போது எதிர்ப்புறமாக வந்து தயக்கத்துடன் கேட்டாள் அவள். எங்கள் காதல் பக்கங்களில் முக்கியமானவற்றைக் கிழித்து விட்டு வெறும் முகவரி பற்றி மட்டும் அவள் பேச நினைக்கிறாள் என்பது சத்யாவுக்குத் தெரிகின்றது.
தெரியும்.
தெரியுமா? அப்ப ஏன் நான் பார்த்தும் பார்க்காமல் இருந்தீர்கள்?
எனக்கு உங்களைக் கண்டதும் கூப்பிட்டுக் கதைக்க வேண்டும் போல இருந்தது. கூட வந்தவை ஏதாவது நினைச்சாலும் என்ற பயத்தில் தான் தெரியாதது போல இருந்தேன். இவ்வளவு காலம் போயும் அப்படியே தான் இருக்கிறீங்கள் மேகா. பேச்சின் திசையை மாற்றினான் சத்யா.
உண்மைதான். எவ்வளவு காலம் போனாலும் எல்லாம் குத்திய முள்ளுப் போல அப்படியே தான் இன்னமும் இருக்கிறது மாஸ்டர். நான் சொல்வது மனசிலே. அவள் தலை கவிழ்ந்து சொன்னாள்.
தலைமேல் கூப்பிய கையோடு தேவாரம் பாடிக்கொண்டு வந்த ஒரு ஆச்சி தம்பி கொஞ்சம் விலகப்பா அங்காலே போவதற்கு என்றாள்.
அது தான் அவர் விலகிட்டாரே. இனி எங்கே விலகுவது? என்று அந்த ஆச்சிக்குச் சொல்லிச் சிரித்துக் கொண்டு திரும்பிப் போனாள்; மேகலா.
காதலில் தோற்பது ஒரு கவலை என்றால் அந்தக் காதலியை திரும்பவும் காண்பது அதைவிடக் கவலை என்று தான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் விட தாங்க முடியாத கவலையொன்று காதலிலே உண்டு. அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
அது தான் காதலித்தவள் கண்ணுக்கு முன்னாலே தன் கணவனுக்கு செய்யும் பணிவிடைகளைக் காண்பது. அதைப் பார்த்து ஒரு பொறாமை வருமே அது தான் காதலில் தோற்ற மனங்களைச் சுட்டுத் தகனம் செய்கிற மிகப்பெரிய துன்பம். ஆறாத ரணம். மனதிலே அன்பைக் கலைத்துவிட்டுக் காமம் புகுந்துவிடும் நேரம் அது.
சத்யா பார்த்துக் கொண்டிருக்க முழங்கால்களில் கணவனுக்கு முன்னால் மண்டியிட்டு பாயில் இருந்து கொண்டு கணவனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு அவனின் கண்களைத் தன் ஒரு கையால் பொத்திக்கொண்டு உதடுகளால் நெற்றியை ஊதினாள் மேகலா. அவளின் மறு கை மடிக்கப்பட்டு முழங்கை மட்டும் அவனின் மடியிலே ஊன்றப்பட்டு இருந்தது. தாவணிச் சேலை மட்டும் நிலத்திலே சரிந்து அவன் கால் விரல்களோடு கதைபேசிச் சிரித்தது.
இனியும் கோவில் நின்றால் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டிவரும் என்று நினைத்துச் சத்யா புறப்படத் தயாரான போது மாஸ்டர் என்றாள் மேகலா இப்போது தான் முதலில் கண்டவள் போல. எழுந்து நின்று சிரித்தாள். சத்தியனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
எனக்குப் படிப்பித்த மாஸ்டர் மாமி என்று என்று அவள் அறிமுகப் படுத்தவும் எப்படி மோனே இருக்கிறாய் என்று கேட்டாள் அந்தத் தாய். அதற்குள் அந்தக் கணவனும் கைகூப்பி வணங்கி வரவேற்றுவிட்டான். இருக்கிறேனம்மா. என்ன இவர் காலிலே.
என்னத்தைச் சொல்லுறது மோனை. செல் வெட்டினது தான். உன்னைப் போலத்தான் இவனும் பள்ளிக் கூடத்திலே படிப்பிச்சவன். இப்ப தள்ளிக்கொண்டு திரியுறம். எங்கே பெண்சாதி பிள்ளையள் வரல்லையா? தனிய நிக்கிறாய் தம்பி.
இல்லையம்மா. நான் தனியத்தான் வந்தனான். இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள். மனுசி வீட்டிலே சமைக்குது. பிள்ளைகளுக்கு டியூசன். அது தான்
ஓ! பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாஸ்டர் என்று ஆங்கிலத்தில் சொன்ன அந்தக் கணவன் மேகலாவைப் பார்த்து படிக்காத அம்மா கூட நல்லா இரு மோனை என்று சொல்லுறா. மேகா நீர் படிப்பித்த மாஸ்டருக்கு ஒரு வாழ்த்துச் சொல்லாமல் நிற்கிறீர். என்ன பழக்கம் இது என்றான்.
நான் கவனிக்கவில்லை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாஸ்டர் என்றாள் மேகலா. சத்யா நன்றி சொல்வதற்குள் இவள் பிள்ளையும் யாழ்ப்பாணத்திலே படிக்கும் போது யாரோ உயிர்ச் சினேகிதியாம். வருத்தம் வந்து செத்துப் போச்சாம். அதின்ரை பிறந்தநாளும் இன்றைக்குத் தான் கட்டாயம் கோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லி கால் ஏலாதவனையும் இழுத்துக் கொண்டு வந்து விட்டாள். வருசா வருசம் அந்தப் பிறந்தநாளுக்கு கோவிலுக்கும் போகாமல் இருக்க மாட்டாள். நாள் முழுவதும் சாப்பிடவும் மாட்டாள். ஊர் உலகத்திலே இல்லாத அப்படியொரு சினேகிதம் வைச்சிருக்கிறாள் என்றாள் மாமி..
சத்யா திகைத்துப் போனான். அவனுக்கு அந்த நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது. அன்று அவனுக்குப் பிறந்த நாள். யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து படித்த வீட்டுக்காரரிடம் டியூசன் முடிய நேரமாகும் என்று அறிவித்து விட்டு வந்த மேகலாவுடன் அந்த மாலை வேளையில் கொட்டடி மீனாட்சி அம்மன் கோவில் முன் மண்டபத்தில் பண்ணைக் கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தான் சத்யா.
களைத்துச் சிவந்து போய் கடலிலே கொஞ்சம் கொஞ்சமாக மறையும் சூரியனை அந்தக் கோவிலில் இருந்து பார்ப்பதே ஒரு தனி அனுபவம். அருகே மனதுக்குப் பிடித்த காதலியும் இருந்துவிட்டால் அங்கே சொர்க்கம் நிர்மானிக்கப்பட்டு விடுகின்றது.
வரும் போது நாவலர் சந்தியில் சினிமாச் சுவரொட்டிகளைத் தின்றுவிட்டு ஒரு மாடு போட்டிருந்த சாணியில் வழுக்கி மோட்டார்ச் சைக்கிளோடு விழுந்து முழங்கையில் கல்லுத் தேய்த்த காயத்தை அவளுக்கு இன்னும் காட்டவில்லை சத்யா. சொன்னால் கவனமில்லை என்று ஏசுவாள் அழுவாள் என்று பயம்.
பிறந்த நாள் பரிசாக ஒரு மொண்டியா மணிக்கூட்டைக் கையில் கட்டிவிட்ட போது தான் காயத்தை அவள் பார்த்துவிட்டாள். கத்தினாள். உங்களுக்கு ஒன்று என்றால் நான் என்ன செய்கிறது என்று அழுதாள். பின்பு சொன்னாள்.
இது வேறு ஒன்றுமில்லை. காலையிலே பிறந்த நாளுக்கு முட்டை போட்ட கேக் வாங்கி யோசிக்காமல் இரண்டு பேரும் சாப்பிட்டோம் இல்லையா? அது தான் கடவுளுக்குப் பொறுக்கல்லை. உடனேயே காட்டிப் போட்டுது. நான் இந்தக் கோவில்லே இப்பவே சத்தியம் பண்ணுறேன். இனி உயிர் உள்ள வரைக்கும் உங்கள் பிறந்த நாள் அன்றைக்கு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பேன். ஏதாவது ஒரு கோவிலுக்கு போட்டு வந்து தான் தேத்தண்ணீர் கூடக் குடிப்பேன் சரியோ.
பொறுங்கோ வருகிறேன் என்று சொல்லிலிட்டு சத்யா கீழே ஓடினான். இரண்டு தட்டிலே பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து அம்மா செத்துப் போன உறவுக்காக சாப்பிடாமல் இருக்க வேண்டாம் என்று உங்களுடைய மருமகளுக்கு சொல்லுங்கோ அம்மா. கடவுள் இனிக் கோவிக்க மாட்டார். இதைச் சாப்பிடச் சொல்லுங்கோ என்றான் சத்யா.
இல்லை நான் இன்றைக்குச் சாப்பிட மாட்டேன். விரதம். நான் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவள். என் சினேகிதிக்காக அம்மனுக்கு முன்னாலே செய்த சத்தியம் இது. சினேகிதி தான் என்னோடு இல்லாமல் போனாலும் அவள் தொடக்கி வைத்த நினைவுகள் இன்னமும் என் மனதுக்குள்ளே ஈரமாகத் இருக்குது. கோவிக்காதையுங்கோ மாஸ்டர்.
அது சொல்வழி கேளாது மோனை. தான் பிடிச்சது தான் சரியென்று நிக்கும்;. நீ அதிலே எனனுடைய பேத்திகள் இரண்டு பேரும் நிக்கினம். அவையைச் சாப்பிடச் சொல்லிக் குடு தம்பி. அதுகளுக்குப் பசிக்கும்.
சத்யா அந்தப் பிள்ளைகளிடம் தட்டுகளைக் கொடுத்துவிட்டு வந்தான். நான் தப்புப் பண்ணிவிட்டேன் என்று மனம் அழுதது.
சரி மாஸ்டர் நாங்கள் போயிட்டு வாறோம். மனைவி பிள்ளைகளைக் கேட்டதாகச் சொல்லுங்கோ. உங்களுடைய பிள்ளைகளுக்கும் என்னுடைய பிள்ளைகள் வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை கூடவோ தெரியாது. கவனமாகப் படிப்பியுங்கோ. உங்களைக் கண்டது சந்தோசம் என்ன என்று சொல்லிச் சிரித்தாள் மேகலா.
அவள் என்ன கேட்கின்றாள் என்று சத்யாவுக்குத் தெரியும். என்னை விட்டு ஓடிப்போய் உடனேயே சந்தோசமாகக் கல்யாணம் பண்ணிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு விட்டீர்களா என்பதைத்தான் ஒருவேளை கூடவோ தெரியாது என்று அவள் ஒரு வார்த்தையை வயதோடு சேர்த்துக்கொண்டாள் என்பது சத்யாவுக்கு மட்டும் தெரியும்.
இல்லை எனது பிள்ளைகளுக்கும் இவர்களுடைய வயது தான் இருக்கும் என்ற பதிலின் மூலம் உம்மை நான் முந்திக்கொண்டு ஓடவில்லை என்று மறைமுகமாகச் சொன்னான் சத்யா. அதை விளங்கிக் கொண்டு புன்னகைத்தாள் மேகலா.
சத்யாவுக்கு வருத்தம் தான். இவ்வளவு தூரம் பேசிக் கொண்ட பிறகு கூட ஒரு சம்பிரதாயத்துக்காக என்றாலும் ஒரு நாளைக்கு மனைவி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வாங்கோ மாஸ்டர் என்று இவள் கேட்காமல் போகின்றாளே சரி அதுதான் வேண்டாம் போன் நம்பரையாவது தந்து கதையுங்கோ என்று சொல்லியிருக்கலாம் எதுவுமே சொல்லாமல் போகின்றாளே என்று துடித்தான் சத்யா.
பொறுக்க முடியாமல் அம்மா உங்களை எனக்கு நல்லாகப் பிடிச்சிருக்கு. ஒரு நாளைக்கு மகனையும் மருமகள் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வாங்களேன் என்று மாமிக்குத் தூண்டில் போட்டுப் பார்த்தான் சத்யா.
உங்களுக்கு மாமியை விருப்பம் என்றால் இப்ப வேண்டும் என்றாலும் கூட்டிப் போங்கோ எங்களுக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஒரு கிழமை உங்கள் வீட்டிலும் மாமி இருந்து பார்க்கட்டும் என்ற தன் பதிலால் உன் வீட்டுக்கு நான் வர மாட்டேன் என்று அறிவித்துவிட்டு திரும்பினாள் மேகலா.
மாஸ்டர் எனக்கு காலிலே பிரச்சனை வந்த பிறகு நல்ல மனுசரை சந்தித்தது மிகவும் குறைவு. அதிகம் வெளியிலும் நான் போவதில்லை. உங்களைப் போல படித்த வர்க்கத்திலே நட்பு இருந்தால் நல்ல விசயங்களைக் கதைக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் மேகாவின்ரை செல் நம்பரை வாங்கிக் கொண்டு போங்கோ. எனக்குப் போன் இல்லை. அது தேவையுமில்லே. மேகா மாஸ்டருக்கு உமது நம்பரை எழுதிக் கொடுமப்பா
நில்லுங்கோ மாஸ்டர் அருச்சனை அலுவலகத்திலே ஒரு பேனை வாங்கி எழுதிக் கொண்டு வாறேன் என்ற மேகலா சற்று நேரத்தில் எழுதி வந்து தந்துவிட்டு விடை பெற்றாள்.
கடவுளே எனது இன்றைய பிறந்த நாளுக்குத் தான் மிகப் பெரிய உறவுப் பரிசு ஒன்றைத் தந்திருக்கின்றாய். நான் தொலைத்த உறவை திரும்பவும் தேடித் தந்திருக்கின்றாய்! என்னவளோடு நான் என்றுமே பேசிக்கொண்டு இருக்க வேண்டும். அவளோடு பேசிக் கொண்டு இருக்கும் போதே செத்தும் விட வேண்டும்.
மேகா எழுதித் தந்த துண்டை சட்டைப் பையில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை சத்யா. அருச்சனை செய்த சந்தணம் குங்குமம் தேங்காய் இருந்த பையிலே கவனமாக வைத்துக் கொண்டு காரில் ஏறினான். அவன் மனம் முழுவதுமே மேகலா வியாபித்திருந்தாள். யாழ்ப்பாணத்துக் கல்வி உலகத்துக்கு அவன் மனம் சென்று பழைய நினைவுகளை ஒவ்வொன்றாகத் தேடத் தொடங்கியது.
மாஸ்டர் உங்களை இரண்டு பிள்ளைகள் வந்து தேடிக் கொண்டு போகினம் என்று அறிவித்தாள் அந்தத் தனியார் கல்வி நிலையத்தின் வரவேற்பு அறைக்குப் பொறுப்பான பெண்.
என்னையா யாரது என்று கேட்டான் சத்யா.
அடேய் அந்த இரண்டாவது ஓ. எல் வகுப்பிலே வடிவான உயரமான வெள்ளைப் பிள்ளை ஒருத்தி இருப்பாளடா. வன்னியிலே இருந்து படிக்க வந்தவள் அவளும் மற்றது அந்த வாயாடி ஸ்ரெலா அவளும் தானடா வந்து தேடிக் கொண்டு போறாளவை. ஏதாவது பிரச்சனை என்றால் ஸ்ரெலாவின்ரை ஆட்கள் சுறாவுக்கு குத்துற மண்டாவால தான் ஏத்துவான்கள் கவனமாக இரு என்று அடுத்த அறையிலிருந்த ஆசிரிய நண்பன் சொல்லிச் சிரித்தான்.
சேர் இன்று காலை வகுப்பிலே ஒரு பையனை நீங்கள் படிக்கவில்லை ஏசினீங்களே அப்போது நீங்கள் சொன்ன கதை உண்மையாக நடந்ததா? நீங்கள் படிக்க கஸ்டப்பட்டீங்களா? என்று கேட்டாள் நீலமேகலா சத்யாவிடம் தனிமையில்.
உண்மைதானம்மா. படிக்கக் காசில்லாமல் நான் பட்ட கஸ்டம் கொஞ்சமல்ல. கற்பூரக் கம்பனியிலே வேலைக்குப் போய்த்தான் நான் படிக்கக் காசு சேர்த்தேன். இவன்களுக்குப் படிக்கச் சொல்லிப் பெற்றார் காசை அள்ளி இறைச்சாலும் படிக்கிறான்கள் இல்லை. அது தான் கோபம் வந்தது.
சேர் சின்ன வயசிலே நீங்கள் பட்ட கஸ்டம் போகட்டும். நீங்கள் என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. வன்னியிலே எங்களுக்கு நிறைய வயல் இருக்குது. திருகோண மலையிலும் வவுனியாவிலும் கடை இருக்குது. நான் உங்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்.
சத்யாவின் பதிலுக்குக் காத்திராமல் தானே ஒரு முடிவைச் சொல்லி விட்டு மேகலா போய் விட்டாள்.
அதன் பின்பு யாழ்ப்பாணத்து உறவினர் வீட்டில் தங்கிப் படித்த நேரத்தை விட மேகலா சத்யாவுடன் இருந்த நேரம் தான் அதிகம் என்று சொல்லும் அளவுக்கு அந்த உறவு மலந்து இருந்தது. எங்கள் வீட்டிலே யாழ்ப்பாணத்துப் பையன் என்றால் மறுக்க மாட்டினம். உங்கள் வீட்டிலே தான் வன்னி அது இது என்று ஏதாவது பிரச்சனை வருமோ தெரியாது. நான் பார்த்த அளவிலே யாழ்ப்பாணத்தாருக்கு சரியான கொழுப்பு இருக்கு என்பாள் மேகலா.
உமக்கு அப்படி ஒரு பயம் இருந்தால் இப்பவே உம்மை எங்கள் வீட்டுக்குக் கூட்டிப்போய் அவர்கள் வாயாலேயே நீ தான் எங்கள் மருமகள் என்று சொல்ல வைக்கட்டுமா
இல்லை இல்லை அதெல்லாம் வேண்டாம். நான் உங்களை நம்புறன். நீங்கள் சொன்னால் சரிதான்.
பல காதல்கள் சாதியாலே அழிந்தன. பல காதல்கள் சாத்திரத்தால் அழிந்தன. பல காதல்கள் பணத்தாலே அழிந்தன இன்னும் பல காதல்களைப் பெற்றார் அண்ணன் தம்பிகளே அழித்து ஒழித்தனர் யாழ்ப்பாணத்தில்! ஆனால் இவை எதுவும் இல்லாமல் நன்றிக் கடனுக்குப் பிராயச்சித்தமாக தனது காதலைத் தியாகம் செய்ய வேண்டிய காலம் ஒன்று வரும் என்று சத்யா எதிர்பார்த்து இருக்கவில்லை.
சத்யா ஏ.எல் படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டிலே இருந்த உம்மை இன்றைக்கு யாழ்ப்பாணத்தின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவர் ஆக்கியது நாங்கள். பட்டி தொட்டியெல்லாம் உமது பெயரைச் சுவரொட்டியாக ஒட்டிப் பிரபலப்படுத்தியது நாங்கள். அதுக்கு நீர் செய்யும் நன்றிக் கடனா இது?
உம்முடைய கதை வெளியே பரவினால் எவன் எங்களை நம்பிப் பொம்பிளைப் பிள்ளைகளைப் படிக்க அனுப்புவான் என்று சொல்லும் பார்ப்போம். தயவு செய்து இந்தக் காதல் கத்தரிக்காய் ஒன்றும் உமக்கு வேண்டாம்.
இந்த டியூட்டரியை நம்பித்தான் எங்கள் எல்லோருடைய வாழ்க்கையும் இருக்கு. நீர் ஒரு ஆளாலே அத்தனை பேரும் கஞ்சிக்கு அலைய வேணும் என்று நினைக்கிறீரா. உம்மை எவ்வளவு உயர்வாக நினைத்திருந்தோம். இப்படிப் பண்ணியிருக்கிறீரே.
இப்ப நினைச்சாலும் உம்மை நீக்கிவிட்டு வேறு ஆளைப் போட முடியும். அது பிரச்சனையைத் தீர்க்காது என்ற படியால் தான் உம்முடைய காலிலே விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கின்றோம். தயவு செய்து நாங்கள் சொல்வதைக் கேளும்.
உங்களுக்கு என் காதல் தான் பிரச்சனை என்றால் நான் மேகலா படிச்சு முடித்த பின்பு வன்னியிலே போய் பேசிச் செய்து கொள்கிறேன். அது வரைக்கும் நான் அவளைப் பார்க்கல்லை சரியோ
இல்லை நீர் யாரை வேண்டும் என்றாலும் கட்டும். ஆனால் இங்கே படித்த பிள்ளைகள் வேண்டாம். எவ்வளவு காலம் போனாலும் அந்த அவப் பெயர் எங்களைப் பாதிக்கத்தான் செய்யும். இந்த நிலையத்தை நாங்கள் எதிர் காலத்தில் மிகப்பெரிய கல்லூரி ஆக்கும் கனவோடு இருக்கின்றோம். அந்தக் கனவைக் கெடுக்காதையும்.
யாழ்ப்பாணக் கல்வி உலகத்துக்கு நீர் செய்யும் மிகப்பெரிய உதவியாக இதை நினைத்து எல்லாவற்றையும் கையை விடும்.
சரி உங்களுக்கு நான் இப்ப என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் சத்யா நிர்வாகத்தைக் கேட்டான்.
நீலமேகலாவை நாங்கள் டியூட்டரியை விட்டு வெளியே அனுப்புறம். நீர் அவளோடை இனி ஒரு தொடர்பும் வைக்கக் கூடாது. அவள் வன்னிக்கே போகட்டும்.
மார்கழியில் பரீட்சை வரப் போகுதே இடையிலே படிப்பைக் குழப்பி அனுப்பினால் பாவம் அல்லவா
அதை அவள் முதலிலே யோசித்து நடந்திருக்க வேணும். நீரும் தான்!
சத்யா எதுவும் பேசவில்லை. சில நாட்கள் வகுப்புக்கு அவன் வரவுமில்லை.
அன்று சத்யா வகுப்புக்கு வந்தான். வகுப்பிலே மேகலா இல்லை. ஸ்ரெலா மட்டும் அவனை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டுத் தலை குனிந்து இருந்தாள். நீ எல்லாம் ஒரு மனுசனா என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை.
தம்பி யாழ்ப்பாணத்தவனுக்கு அந்தப் பிள்ளையைக் கட்டித்தரக் கூடாது என்ற சுயமரியாதை தலை தூக்கக் கூடியதாக அதின்ரை அப்பனோடு பண்பு தவறிக் கதைத்துப் போட்டினம் உம்முடைய டியூட்டரி ஆட்கள். அவன் படிக்காதவன் என்றாலும் மானஸ்தன். வசதியானவன்.
அவன் என் நண்பன். அவன் கண் கலங்கியதை முதன் முதலாக நான் அன்றுதான் பார்த்தேன்.
உம்மைக் காதலித்த ஒரு தப்புக்காக அந்தப் பிள்ளை இந்த முற்றத்திலே அப்பனிட்டை வாங்கின அடிகள் கொஞ்சமல்ல. நாங்கள் மறித்திருக்காவிட்டால் செத்திருக்கும்.
உன்னை நம்பிப் பிள்ளையைப் படிக்க விட்டால் அவள் என்ன ஏது செய்கிறாள் என்று நீ பார்க்க மாட்டியா? உன்னையும் அவளுக்கு ஒரு அப்பன் என்று நினைத்துத் தானே உனது வீட்டிலே இருந்து படிக்க விட்டேன். நீயும் சேர்ந்தா இந்தக் கூத்தெல்லாம்? என்று கேட்டான் தம்பி அவன்.
அதுகள் போட்டுதுகள். சரி நீரும் இனி உம்முடைய வேலையை போய்ப் பாருமன்.
இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் காட்டிவிட்டுத் தெருப்படலையைச் சாத்திக் கொண்டு போனார் மேகலா இருந்து படித்த வீட்டுக்காரப் பெரியவர்.
இன்றைய கம்பியூட்டர் போன் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு காலத்தில் அந்த வீட்டின் முன்னால் நீண்ட நேரம் நின்றான் சத்யா
ஏனப்பா ஏதாவது பிரச்சனையே நான் சமைத்து வைத்துவிட்டு பார்த்துக் கொண்டிருக்கிறன். கோவிலாலே வந்து காராலே இறங்காமல் இருக்கிறியள் என்றாள் மனைவி ஜன்னலால் எட்டிப் பார்த்து.
சாப்பாட்டைப் போடும் வாறன் என்று சொல்லிவிட்டு அருச்சனைப் பையில் இருந்து மேகலா தந்த துண்டுச் சீட்டை எடுத்து விரித்தான் சத்யா.
அவன் ஆவலோடு எதிர்பார்த்த போன் நம்பர் அதிலே காணப்படவில்லை.
மரங்கள் என்றால் நிழல் கொடுக்கும் பண்பு அதற்கு இருக்க வேண்டும். ஆனால் அந்த மரங்களே தங்களுக்கு நிழல் தேடி அலைந்தால் அவைக்கு யார் எதனால் எந்த நிழலை எத்தனை தடவைகள் கொடுத்துவிட முடியும்? இன்று இன்னொரு மரத்தினைச் சுற்றிக் கொண்டு வாழும் ஒரு கொடியின் போன் நம்பர் நிழல் கொடுக்குமா? இல்லையே! அதனாலே அதை நான் தரவில்லை.
என்ற வாக்கியத்தை மட்டும் தான் அதிலே கண்டான் சத்யா.
Rasiah Gnana
கனடா ஈழநாடு பத்திரிகையில் நேற்று (15.1.2021) வெளியான சிறுகதை