புதினங்களின் சங்கமம்

சுமந்திரன் தனிமைப்படுத்தப்படுகிறாரா? – நடந்தது என்ன?

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிப் பழகினார்கள் என்ற அடிப்படையில் எம்.ஏ. சுமந்திரன், கயந்த கருணாதிலக, தலதா அதுகோரல, இரா.சாணக்கியன், பைசல் காசீம், எம்.எம்.ஹரீஸ், என்.எம்.தௌபீக், நசீர் அஹமட் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து சுமந்திரன் செய்தியாளருக்கு விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்ற பாதுகாப்புப் பிரிவினால் கொரோனா பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு எனக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

குறித்த கடிதம் தொடர்பில் நாடாளுமன்ற செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டேன்,

அவர் பதிலளிக்கும் போது,

கடந்த நாடாளுமன்ற அமர்வு நடைபெற்ற நாள் அன்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு அருகில் இருந்து கஞ்சி பருகியவர்கள் சிசிரிவி கமெரா மூலம் அடையாளப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த செயலாளர், கஞ்சி பருகும் போது மாஸ்க் அணிந்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிதாகத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனிடம் கேட்டதாகவும், அவரின் ஏற்பாட்டில் நாளை காலை தனக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை,

யாழ்.பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி இந்த விடயத்தினை வைத்து, நாளைய கதவடைப்புப் போராட்டம் தொடர்பில் அறிவதற்கு முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று தான், யாழ்ப்பாண வர்த்தக நிலையச் செயற்பாடுகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக யாழ்.வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரம் வீட்டுக்குச் சென்று திரும்பியதாகவும் அதன் பின்னர் இரண்டு வாகனங்களில் அவருடைய வீட்டுக்குச் சென்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், சுமந்திரன் வந்து சென்றதால் ஜெயசேகரம் குடும்பத்தாரை தனிமைப்படுத்தப்போவதாக எச்சரித்ததாகவும் பின்னர், சுமந்திரன் ஏன் வந்தார்? நாளை என்ன செய்ய உத்தேசம் என்று விசாரித்துச் சென்றதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.