புதினங்களின் சங்கமம்

‘காட்டிக் கொடுத்தவர்களே!! இதைச் சப்புங்கடா!! சாய்ந்தமருது பயங்கரவாதிகள் கத்தியது ஏன்??

காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர்
பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு நேரடி ரிப்போர்ட் !

– எமது விசேட செய்தியாளர் சாய்ந்தமருதில் இருந்து… –

” அடேய் காட்டிக் கொடுத்தவனுகளா… இந்தா …இந்த காச எடுத்து சப்புங்கடா…
உங்களுக்காகத்தான்டா உயிரைக் கொடுக்கப் போறோம் மூதேசிகளா….”

இப்படிக் கத்தியபடி சாய்ந்தமருது ,வெலிவேரியன் கிராமத்தில் வாடகைக்கு இருந்த வீட்டின்
பக்கத்துக்கு வீடுகளுக்கு பண நோட்டுக்களை அள்ளி வீசியிருக்கின்றனர் தற்கொலைதாரிகள்…

கடந்த 18 ஆம் திகதி இந்த வீட்டை வாடகைக்கு பெற்ற இருவர் அந்த வீட்டில் தங்காமல் போய்விட்டு
இரண்டு நாட்கள் சென்ற பின்னர் 8 பேருடன் வந்துள்ளனர்.சிறு பிள்ளைகள் நால்வர் ,2 பெண்கள்
மற்றும் ஆறு ஆண்கள் வந்து தங்கியிருந்த போது அவர்களில் சந்தேகம் கொண்ட வீட்டின் உரிமையாளர்
அவர்களிடம் விபரம் கேட்கச் சென்றதாக தகவல்.அப்போது ஒருவர் ஆயுதம் ஒன்றைக் காட்டி ஒருவரும்
வாய்திறக்கக் கூடாதென எச்சரித்துள்ளார்.

என்றாலும் இந்த தகவல் சற்று வெளியில் கசிந்ததையடுத்து அங்குள்ள ஒருவர் போக்குவரத்து
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் முறையிட்டுள்ளார். மக்களுடன் மிக நட்புடன் பழகும் இந்த
உத்தியோகத்தர் இன்னும் இரு உத்தியோகத்தர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றபோது
துப்பாக்கிதாரிகள் சுட ஆரம்பித்தனர் .இதையடுத்து நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்த அந்த
உத்தியோகத்தர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.

மக்கள் பதற்றத்தில் அங்குமிங்கும் செல்ல ஆரம்பித்த நிலையில் இனி நிலைமை விபரீதமாகப்
போகிறது என்பதை உணர்ந்த துப்பாக்கிதாரிகள் பெரிய உரப்பையை வெளியில் எடுத்துவந்து அதில்
இருந்த பணத்தை கட்டுக் கட்டாக வீசி கேவலமான வார்த்தைகளை கூறி திட்டியுள்ளனர். ” காட்டிக்
கொடுத்த நாசமறுத்தவனுகளே மூதேசிகளா .. இந்த பணத்தை எடுத்து சப்பிக் கொண்டிருங்கடா
…உங்களுக்காகத்தான்டா உயிரைக் கொடுக்கிறோம்…” என்று கூறியபடி பணக்கட்டுகளை இவர்கள்
வீசியபோதும் மக்கள் எவரும் அதனை கிஞ்சித்தும் கணக்கெடுக்காமல் தமது பாதுகாப்பை தேட
ஆரம்பித்தனர்.

பின்னர் படையினர் வந்ததையடுத்து நிலைமை மோசமானது.சரணடையுமாறு அவர்களை பணித்தபோதும்
அதனை செவிமடுக்காத தற்கொலைதாரிகள் குண்டை வெடிக்க வைத்துள்ளனர். புத்தம் புதிதாக
கொள்வனவு செய்யப்பட்ட வேன் ஒன்றும் அங்கு இருந்துள்ளது.

முக்கிய தாக்குதல் ஒன்றை நடத்த இவர்கள் திட்டமிட்டு வந்திருக்கலாமென சொல்லப்படுகிறது.
காத்தான்குடியை சேர்ந்தவர்கள் இவர்களென பொலிஸார் கூறுகின்றனர்.

வவுணதீவு துப்பாக்கி !

இதேவேளை வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதலையும் இந்தக் குழுவே செய்துள்ளதாக
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் வாகன சாரதி காத்தான்குடி -3,
மீன் சந்தை வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய முகமது சரீப் ஆதம் லெப்பை கபூர் நேற்று முன்தினம்
கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

கபூரிடமிருந்து கைத் துப்பாக்கி மற்றும் லப்டொப் ஆகியன மீட்கப்பட்டுள்ளன .பொலிஸார் அவரிடம்
மேற்கொண்ட விசாரணைகளில் திடுக்கிடும் பல இரகசிங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தான் ஸஹரானின் வாகன சாரதியாக 35 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலை செய்ததாகவும், கடந்த
நவம்பர் மாதம் 19 திகதி வவுணதீவு பொலிஸ் சோதனை சாவடியில் இருந்த பொலிஸாரை கத்தியால்
தானே குத்தி கொலை செய்ததாகவும் நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் தொடர்பான
திட்டங்களை வகுக்கும்போது தான் உடனிருந்ததாகவும், கல்முனை – சாய்ந்தமருதில் அடுத்த
தற்கொலை தாக்குதல் தொடர்பாக திட்டமிட்டபோது அங்கும் தான் இருந்ததாகவும் பொலிஸாரிடம் அவர்
தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் காணொளி ஒளிப்பதிவு !

தாக்குதலுக்கு முன்னர் தக்பீர் கூறிய காணொளியை இந்த சந்தேகநபர்கள் சம்மாந்துறை ,சம்புமடு
– சென்னல் கிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து ஒளிப்பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த
விடியோவை எடுத்தவர்கள் ,எடிட் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியவர்கள் குறித்து
விசாரணைகள் நடத்தப்படுகின்றன.மூன்று கிழமைகளுக்கு முன்னரே இந்த வீடு வாடகைக்கு
எடுக்கப்பட்டுள்ளது. பாதணி செய்யும் கைத்தொழில் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக கூறியே இந்த வீடு
வாடகைக்கு எடுக்கப்பட்டாலும் அதன் உரிமையாளர் சந்தேகம் கொண்டு இதனை பொலிஸாருக்கு
தெரிவித்துள்ளார்.

(இந்த செய்தியை சம்பவ இடத்தில் இருக்கும் தமிழன் செய்திச் சேவையின் செய்தியாளர் நேரடியாக
பார்த்தும் மக்களிடம் பேசியும் – கேட்டும் எழுதியிருந்தார்.பாதுகாப்பு காரணங்களுக்காக
இந்த தகவல்களை கூறிய பொதுமக்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை )