கிளிநொச்சியில் கசிப்புக்கு எதிராக போராடும் இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை!!
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கட்சன் வீதியில் வைத்தே குறித்த இளைஞன் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தங்களது கிராமத்தில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொலிஸாரின் உதவியுடன் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இவ்வாறு இளைஞர்களின் ஒத்துழைப்புக் காரணமாக பல கசிப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை செய்வோர் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் கசிப்பு உற்பத்தி செய்யும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த இளைஞர்கள் மீது ஆத்திரமடைந்த, சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் குழுவினர், தம்மைக் காட்டிக் கொடுக்கும் இளைஞர்கள் தனியாகச் செல்லும்போது அவர்களை இலக்கு வைத்து தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இதனடிப்படையிலேயே குறித்த இளைஞன் மீதும் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

