ஐயாத்துரையற்றை மேளும் ‘மேக்கப்பும்’
ஐயாத் துரையர்தன் அழகுமகள் செல்விக்கு
பையவே நடந்துபல பொருத்தங்கள் பார்த்துவந்தார்
ஆறேழு சாதகங்கள் அப்படியே தட்டிப்போய்
வாறதுகள் எல்லாமே வாய்க்காமல் இழுபட்டு
ஒருகுறிப்பில்
ராசி பொருந்திவரும்; வசியம் பொருந்தாது;
யோசித்துப் பொருத்திவிட்டால் யோனி பொருந்தாது
இப்படியே
சாத்திரியைத் தேடிப்போய் சந்தித்துச் சரிபார்த்து
ராத்திரி பகலெல்லாம் ரணப்பட்டு வரன்தேடி
கடவுளரின் காரியமோ கிரகத்தின் நற்பலனோ
அட!வந்த குறிப்பொன்று அச்சொட்டாய்ப் பொருந்திவிட
உடனடியாய் நாட்குறித்து உறவுகளுக் கறிவித்து
கடகடெனக் காரியங்கள் கடுகதியாய் நிறைவேற்றி
என்றைக்கு வருமென்று எதிர்பார்த்த தினமான
அன்றைக்கு விடிய ஆரவார மாயெழுந்து
மத்தியானம் நாளுக்கு,
காலைமணி ஏழுக்கே கன்னியினை நீராட்டி
வாலைக் குமரியவள் வடிவழகைக் கூட்டிவிட
அவ்வூரின் பேர்போன அழகுக் கலையகத்தின்
அழகுக் கலைநிபுணர்: ‘அபிராமி’ அக்காதான்
பழகியவர் என்பதனால் பேசிப் பிடித்துவந்து
அழகாய் வெளிக்கிடுத்த அறைக்குள்ளே விட்டார்கள்
அவளுள்ளே

மணமகளைச் சோடிக்க மணிக்கணக்காய் நிற்கவைத்து
கணமேனுந் தரியாமல் காரியத்தில் கண்ணானாள்
பாவம்! மணப்பெண்ணோ தண்ணிவெந்நி இல்லாமல்
தாகம் மிகவெழும்ப தலைசுற்றிக் கொண்டுவர
‘அல்சர்’ காரியவள்; அவள்வயிற்றில் பசியெழும்பி
‘பல்சர்’ வேகத்தில் பாடாய்ப் படுத்திடினும்
உண்ணக் கொடுத்தாலோ உதட்டிலுள்ள ‘லிப்ஸ்டிக்கு’
வண்ணம் மாறியவள் வாயெல்லாம் வழியுமென்ற
எண்ணத்தால் மறுத்தவளின்
பல்லைக் கடித்தபடி பாவையினை இருக்கவிட்டு
முல்லைக் கொடியாளின் மேற்புருவ முடிமுழுதும்
இல்லை எனும்வரைக்கும் இழுத்துப் பிடுங்கிப்பின்
நிறப்பவுடர் கொண்டவளின் நெற்றி,முகங், கழுத்தெல்லாம்
பரக்கப் பொடிபூசி அவளைஎன்ன வோவாக்கி
இதுவரைக்கும்
‘ஷோஷியலாய்’ பழகிவந்த சோக்கான பெட்டைக்கு
‘fபேஷியலைச்’ செய்துஅவளைப் பேயாக்கி
விட்டுவிட்டார்
எல்லாம் முடிந்துஅறைக்குள் எதேச்சையாய்ப் புகுந்தஅவள்
செல்லத்தாய்; மகளை, காணாமல் திகைத்துப்போய்
“பெண்ணெங்கே?” என்றலறிப் பெருஞ்சத்தம்
போட்டுவிட
“இதுதானுன் பெண்”ணென்று அபிராமி இனங்காட்டி
சுற்றித் திருப்பிப்பின் சோடனையை மாட்டியதும்
செற்றிக் கதிரையிலே இருத்திவிட்டு அவள்போக…
மாங்குளம் அடிச்சபின்னர் மக்கள்போய் புகுந்ததுபோல்
ஆங்கே அறைக்குள்ளே அதிரடியாய்ப் புகவிருந்த
வீடியோக் காரர்கள் விழுந்தடித்து ஓடிப்போய்
நாடியில்கை கொடுக்கவைத்து நாற்பது’ஷொட்’ எடுத்தார்கள்
கொள்ளை அழகெல்லாம் கொட்டிக் கிடக்கின்ற
கன்னக் குழியழகை கருத்திலேயே எடுக்காமல்
என்னவோஎலாம் செய்யசொல்லி எழுபது’ஷொட்’ எடுத்தார்கள்
பாவையினை நடக்கவிட்டும் பத்துச்’ஷொட்’ எடுத்துவிட்டு
“மிச்சத்தை மணவறையில் பாப்பமென” விடஅவளை
அணைத்தபடி தோழியர்கள் அன்போடு கூட்டிவர
மணப்பெண் புறப்பட்டு மணப்பந்தல் நாடிவந்தாள்
காலைமுதல் உணவின்றி களைத்துப்போய் கண்சொருக
நடக்கச் சக்தியின்றி நலிந்தநடை நடந்தவளை
“அட! என்ன அணங்குஇவள்? அப்படியே சக்திமயம்
அன்னம்நடை நடப்பதற்கே இவளிடம்தான் பயிலவரும்
இன்ன நடையென்று எவராலும் கணிக்கவொணா
என்னே நடை!”யென்று எல்லோரும் வியந்தார்கள்
உண்மையிலே அந்தநடை பட்டினியால் ‘நொந்தநடை’
இதுஅந்த
படியளக்கும் பரமனுக்கும் பாவைக்கும் தான்தெரியும்.
மணவறையில் கண்டதெலாம் மங்கலாகத் தான்தெரிய
கணவனெவன்? தோழனெவன்! என்றெதுவும் புரியாமல்
மணவாளன் காலடியில் மயங்கமுற்று விழுந்தவளை…
“குணக்குன்றுக் குமரியிவள் கொண்டவனின் பாதத்தைப்
பணியும் விதத்தைப்பார்! பெண்ணென்றால் இவளல்லோ!
மணியான பிள்ளை”என்றார் மணவறைக்கு முன்நின்றோர்
ஊருக்கும் பார்வைக்கும் உத்தமிதான்; உண்மையிலே
ஆருக்குத் தெரியுமவள் ‘அல்சர்முத்தி’ விழுந்தகதை?
வீடியோக் காரர்தான் விழுவார்; கரைச்சலெண்டால்
மேக்கப்புக் காரராலும் மேலுமொரு தொல்லையப்பா…
#மார்கழி_2020

