புதினங்களின் சங்கமம்

நல்லுார் செம்மணி வளைவு திறக்கப்படாமைக்கு யாழ்ப்பாண கச்சேரி அதிகாரிதான் காரணமா??(Photos)

யாழ் செம்மணிக்கு அருகே நல்லுார் பிரதேசசபையால் அமைக்கப்படும் நல்லுார் இராஜதாணி வளைவு இன்னும் முற்றாக முடிக்கப்படாமைக்கு காரணம் யாழ்ப்பாணக் கச்சேரியில் உள்ள பொறுப்பு வாய்ந்த ஒரு அதிகாரியே என முக்கிய பிரமுகர் ஒருவரால் தகவல் கசிந்துள்ளது. குறித்த வளைவுக்கான வடிவமைப்பை நல்லுார் கோவில் முதலாளியின் மகனான கட்டட வடிவமைப்பாளர் சயந்தனே மேற்கொண்டிருந்தார். அந்த வளைவு அமைக்கப்பட்டு செம்மணி வீதி ஓரங்களில் அழகான முறையில் மரங்கள் நட்டு நல்லுார் முத்திரைச்சந்தி வரையான இடம்வரை அழகுபடுத்த திட்டமும் வரையப்பட்டிருந்தது. ஆனால் அந்த வளைவு அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது அந்த வளைவு அமைப்பதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளாராம் கச்சேரியில் கட்டடங்கள் தொடர்பான பொறுப்பு வாய்ந்த அதிகாரி.

வளைவு அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அந்த வளைவுகளைத் தாங்கும் துாண்களில் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதாக கச்சேரி அதிகாரி கண்டுபிடித்துள்ளாராம். ஆனால் அது வெடிப்பு அல்ல என்றும் அது ஒரு துாணை நிறுவும் போது கொங்கிறீட் பகுதி பகுதியாக போடும் போது அதில் சிறிது வித்தியாசம் தெரியும் என்றும் அதை கச்சேரி அதிகாரி தவறாக காட்டி வளைவு கட்டுவுதற்கு முட்டுக்கட்டை போடுகின்றார் என்றும் குறித்த பிரமுகரால் தகவல்கள் கசிந்துள்ளது. இந் அதிகாரியின் செயற்பாட்டால் மேலும் 4 துாண்கள் பல மில்லியன் செலவில் அந்த வளைவுக்கு முண்டு கொடுக்க அமைக்கப்பட்டதாகவும் அப்போதும் அந்த அதிகாரி வளைவை அமைக்க முட்டுக்கட்டை போடுகின்றாராம். அந்த வளைவை முற்றாக இடித்து மீண்டும் கட்டுமாறு கூறி வருகின்றாராம்.

இது தொடர்பாக ஆராய்ந்த போது அந்த கச்சேரி அதிகாரி குறித்த வளைவின் கட்டட ஒப்பந்தகாரரிடம் ஏதோ ஒன்றை பெற முயன்று அது கிடைக்காத கொதியில் இவ்வாறு செய்கின்றாரா என சந்தேகம் தோன்றியுள்ளதாக குறித்த பிரமுகரின் வட்டாரங்கள் ஊடாக தெரியவருகின்றது