புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் 70 ஆண்டு பழமையான பிள்ளையார் சிலை மதக்காவாலிகளால் சேதம்! (Photos)

வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் காணப்படும் பாரம்பரிய சைவ ஆலயங்கள், அதன் சிலைகள் திட்டமிடப்பட்ட நிலையில் இனவாதிகளால் தொடர்ச்சியாகவே சேதமாக்கப்பட்டு வருகின்றன.குறிப்பிட்ட சில பௌத்த குருமார் படைகளின் ஒத்துழைப்புடன் இவ்வாறான தீய செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான சம்பவங்கள் கூடுதலாக இடப்பெறுகின்றன.

கொரோனா அச்சத்தில் ஊரடங்கி போயுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பிள்ளையார் உருவச் சிலையை இனம்தெரியாத விசமிகள் சேதமாகிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பாக தமக்கு தெரியப்படுத்தியதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

70 வருட கால பழமை வாய்ந்த இரண்டரை அடி உயரமுள்ள சிலையே சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நடவடிக்கை பிரதேச மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதமும் திருகோணமலையில் உள்ள 50 வருட பழமையான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் அடையாளம் தெரியாத விசமிகளால் சேதமாக்கப்பட்டது.

இதேவேளை, கோறளைப்பற்று சார்ந்த பிரதேச சபைகளான வாழைச்சேனை ,கிரான் மேற்கு பகுதிகளில் அண்மைக்காலமாக அடிக்கடி வாகனேரி பகுதியிள்ள இந்து ஆலயங்கள் சேதமாக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் பாரம்பரிய மரபுகள் மற்றும் அதன் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு இலங்கை பொலிஸாரும் உரிய நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கவில்லையென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம் சாட்டியிருந்தார்.