புதினங்களின் சங்கமம்

இறுதியாக உயிரிழந்த மூவருக்கும் கொரோனா இருந்தது உண்மையா? அரசாங்க தகவல் திணைக்களம் கூறுவது என்ன?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பதிவு செய்யப்பட்ட 22ஆவது உயிரிழப்பு கொரோனா நிமோனியா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை – ஜம்பட்டாவீதி பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் உயிரிழந்திருந்ததாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனையடுத்து, அவரது சடலம் நீதிமன்ற வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது உயிரிழப்புக்கான அண்மித்த காரணியாக கொரோனா நிமோனியா தாக்கம் காணப்படுகின்றமையும் பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமையை அடுத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் மூவர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பதோடு, ஏனைய 269 பேரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

அதன்படி, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 8 ஆயிரத்து 129ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.