புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

விடுதலைப்புலிகள் மீதான பிரிட்டனின் தடை மிகத் தவறானது – விசேட ஆணையம் தீர்ப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரிட்டன் அரசின் தடை மிக்த் தவறானது எனப் பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விசேட ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் செயற்படும் அமைப்பினால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது.

இந்த வழக்கானது திறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின்போது மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.

இரகசிய விசாரணையின்போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசின் சட்டவாளராக வாதிட்டிருந்தார்.

எவ்விதமான பயங்கரவாதச் செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச் சுட்டிக்காட்டி தடையை நீக்குமாறு பிரிட்டனின் உள்துறை அமைச்சிடம் 2008ஆம் ஆண்டில் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பு கோரியிருந்தது.

இதனைப் பிரிட்டன் உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசு சட்ட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

இந்தநிலையில் இன்று வெளியான 38 பக்கத் தீர்ப்பின்படி தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை மிகத்தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரிட்டன் அரசு தனது முடிவை அடுத்த சில வாரங்களில் அறிவிக்கும் எனத் தெரியவருகின்றது.