மணல் கொள்ளையர்கள் அட்டகாசம்: யாழ் வரணியில் ஒருவர் படுகாயம்!
யாழ். தென்மராட்சி வரணி பகுதியில் மணல் கொள்ளையர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தின் வரணி பகுதியில் திருட்டு மணல் ஏற்றியவர்களிற்கு பாதை விட மறுத்தவர் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின்போது வரணியை சேர்ந்த கே.கலாசுதன் வயது 46 என்பவர் மீதே மண்வெட்டிப் பிடியால் தாக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைநில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வரணிப்பகுதியில் அகலம் குறைந்த பாதை ஒன்றின் ஊடாக திருட்டு மணல் ஏற்றியவாறு ஐந்து உழவு இயந்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து பயணித்துள்ளன.
அதன்போது அப்பாதையால் இரவு வீடு நோக்கிப் பயணித்தவர் அதனை அவதானித்து கேள்வி கேட்டுள்ளார். இதனால் பாதைவிடுமாறு திருட்டு மணல் ஏற்றியவர்கள் தர்க்கம் செய்துள்ளனர். இதன்போது திருட்டு மண் ஏற்ற அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தமையினால் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்ற வைத்திருந்த மண் வெட்டியின் பிடியை கழட்டி வந்து தாக்கியுள்ளனர்.
இதன் காரணமாக படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் தொலைபேசி மூலம் உறவுகளிற்கு தகவலை தெரியப்படுத்தியதை அடுத்து அவர்கள் சம்ப இடத்திற்குச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாரிடமும் முறையிடப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் பெயரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் தாக்குதல் மேற்கொண்ட மணல் கொள்ளையர்கள் தப்பியோடிய நிலையில் ஒரெயொரு உழவு இயந்திரத்தை மட்டும் பொலிசார் மீட்டுச் சென்றுள்ளனர்.

