சடுகுடு விளையாடும் யாழ் போதனா வைத்தியசாலை X-Ray பிரிவு ஊழியர்கள்.(Photos)
வைத்தியசாலையின் கட்டுமானங்கள் சீரமைக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான உத்தியோகத்தர்களது மனங்கள் இன்னும் சீராகவில்லை.
வெளிநோயாளர் பிரிவின் அறிவுறுத்தலின்படி பற்சிகிற்சைக்கான மேலதிக பரிசோதனைக்கான X-Ray படம் ஒன்றினை பெறுவதற்காக காலை 9.00 மணிக்கு யாழ் போதனா வைத்தியசாலையின் Xகதிர் பிரிவிற்கு சென்றிருந்தேன். அங்கு A,B,C,D என நான்கு பிரிவுகள் காணப்பட்டன. என்னுடன் பல நோயாளர்கள் மருத்துவரின் குறிப்புடன் காத்திருந்தனர். நானும் அவர்களுடன் மருத்துவ குறிப்பினை யாரிடம் கொடுத்து X-Ray படம் எடுத்துக்கொள்வது என தெரியாமல் நான்கு வாசல்களையும் மாறி மாறி சென்று பார்த்தேன். ஒருவரும் காணப்படவில்லை.
திடீரென்று C பிரிவு வாசல் திறக்கப்பட்டது. சிலர் தங்களது படம் எடுப்பதற்கான மருத்துவக் குறிப்புகளை அங்கு பிரசன்னமாகியிருந்த உத்தியோகத்தரிடம் கொடுத்தனர். அவரும் அனைத்து குறிப்புகளையும் பெற்றுக்கொண்டார். நானும் எனது மருத்து குறிப்பை அவரிடம் கொடுத்தேன். அவர் அதைப்பார்த்து விட்டு உங்களுக்கு 10.00 மணிக்குதான் சரிவரும் அதுவரை இதில் இருங்கோ என்றார். நானும் அருகில் இருந்த வாங்கில் அமர்ந்தேன்.
என்னுடன் பல நோயாளிகள் அமர்ந்திருந்தனர். சிலர் வீல் செயாரில் காத்திருந்தனர். 9.30 மணியளவில் C பிரிவின் கதவை திறந்த உத்தியோகத்தர் ஒருவர் சிலரது பெயரை குறிப்பிட்டு ஏற்கெனவே எடுக்கப்பட்ட படங்களை அவர்களிடம் கையளித்துவிட்டு உள்ளே சென்றார்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்து மேலும் சிலரது படங்களை கையளித்துவிட்டு ஒருவரது பெயரை கூறி உள்ளே அழைத்து சென்றார். சிறிது நேரத்தில் அவர் வெளியில் வந்து வாங்கில் அமர்ந்து கொண்டார். அவரைப்போல சில நோயாளர்கள் C பிரிவு வாசல் வழியாக உள்ளே அழைக்கப்பட்டு மீண்டும் வந்து கதிரைகளில் அமர்ந்துகொண்டனர்.
பின்பு வெளியே வந்த வேறொரு உத்தியோகத்தர் நோயாளர்கள் சிலரை B பிரிவு வாசலுக்கு போகச்சொன்னார். நோயாளர்களும் மிகுந்த சிரமத்தோடு B பிரிவு வாசலுக்கு சென்றனர். வீல் செயாரில் இருந்த நோயாளர்களும் அங்கு சென்றனர். எல்லோரும் அங்குசென்ற காரணத்தால் நானும் அங்கு சென்று காத்திருந்தேன். எனக்கு பின்னர் வந்த பலபேர் படம் எடுத்து வெளியேறினர். நான் இன்னும் என் பெயர் கூப்பிடப்படவில்லை என்ற ஆதங்கத்துடன் உள்ளிருந்து வெளியே வந்த உத்தியோகத்தர் ஒருவரை வினவினேன் அதற்கு அவர் C பிரிவில் மருத்துவ குறிப்பை கொடுத்திருந்தால் அவர்களிடம்தான் கேட்கவேண்டும் என்றார். ஆனால் B பிரிவில் படம் எடுத்து வெளியில் வந்த பல பேர் C பிரிவில் மருத்துவ குறிப்பை கொடுத்து B பிரிவில் படம் எடுத்தவர்களாகவே இருந்தார்கள். எனக்கு இவர்களது சடுகுடு விளையாட்டு விளங்கவில்லை.
நான் திரும்ப C பிரிவு வாசலில் வந்து உள்ளே யாரும் இருக்கின்றார்களா என பார்த்தேன். அங்கு ஒருவரையும் காணவில்லை. பின்னர் சிறிது நேரம் வெளியில் காத்திருந்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று பார்த்தேன். அங்கு யாரும் இருந்தமைக்கான எந்த அரவமும் இல்லை. நேரமோ 11.00 மணி ஆகிவிட்டது. யாரிடம் போய் கேட்பது என தெரியாமல் மேலும் சிறிது நேரம் காத்திருந்தேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. B பிரிவு உத்தியோகத்தரும் அங்கிருந்து வெளியில் சென்றுவிட்டார். அந்த பிரிவில் நோயாளர்கள் சிலர் மட்டுமே காத்திருந்தனர்.
அப்போது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பு தெளிவாக இல்லாதபடியால் நான் கொஞ்சம் வெளிப்புறமாக சென்றேன். அப்போதும் C பிரிவு வாசலை நோக்கியவாறே தொலைபேசியில் உரையாடினேன். உரையாடி முடிந்ததும் மீண்டும் C பிரிவு வாசலில் அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் C பிரிவு கதவு திறக்கப்பட்டது அப்போது வெளியில் வந்த உத்தியோகத்தரிடம் 9.00 மணிக்கு கொடுத்த மருத்துவக் குறிப்பிற்கு இன்னும் என்னை கூப்பிடவில்லை எனக்கு பின்னர் வந்தவர்கள் அனைவரும் போய்விட்டார்கள் என்றேன். அதற்கு அவர் உங்கள் பெயர் என்ன என்றார். நான் பெயரைக்கூறியபோது உங்கள் பெயர் கூப்பிடப்பட்டது கூப்பிட்டபோது நீங்கள் இதில் இருக்கவில்லை என்றார்.
அதற்கு நான் 9.00 மணியில் இருந்து இந்த வாசல் அருகில்தான் இருந்தேன். ஒரேயொரு தொலைபேசி அழைப்புக்காக மட்டுமே சற்று தள்ளி நின்றிருந்தேன். அப்போதும் இந்த வாசலை நோக்கியபடியே இருந்தேன் எனது பெயர் இந்த வாசலால் கூப்பிடப்படவில்லை என்றேன். அதற்கு அவர் இந்த வாசலில் அல்ல D பிரிவு கதவால் கூப்படப்பட்டது என்றார். அப்போது நான் எனது சிட்டையை வாங்கியவர் இந்த கதவுக்கு பக்கத்திலேயே இருக்கும்படியும் மற்றைய உத்தியோகத்தரிடம் வினவியபோது சிட்டையை குடுத்த கதவில் உள்ளவர்களிடம்தான் கேட்கவேண்டும் என்று கூறியபடியாலும் நான் இந்த கதவை விட்டு நகராமல் இவ்வளவு நேரமும் காத்திருக்கிறேன் நீங்கள் மற்ற கதவால் கூப்பிடப்பட்டது என்கிறீர்கள் இப்போது நான் என்ன செய்வது என்றேன்.
அதற்கு அவர் ஒன்றும் கூறாமல் உள்ளே சென்று விட்டார். இப்போது நானும் இன்னொருவரும் மட்டுமே எஞ்சியிருந்தோம். சிறிது நேரத்தின் பின்னர் D பிரிவு கதவு வழியாக வெளியே வந்த வேறொரு உத்தியோகத்தர் எங்கள் இருவரையும் உள்ளே வரும்படி கூறினார். நாம் உள்ளே சென்று அமர்ந்து 10நிமிடங்களுக்கு பின்னர் ஒரு பெண் உத்தியோகத்தர் கூப்பிட்ட நேரம் எங்கையும் போறது பிறகு இஞ்சவந்து கரைச்சல் தாறது என்று புறுபுறுத்தபடி வந்தார். அவரிடம் நான் C பிரிவு கதவுக்கு அருகில் காத்திருந்ததையும் D பிரிவு கதவால் கூப்பிட்டது எனக்கு தெரியாது என்றும் கூறினேன்.
அதன்பிறகு இயந்திரத்தில் அமருமாறு கூறியவர் ஒரு சிறிய அட்டையை வாய்குள் வைத்து எனது ஒரு விலால் முரசோடு அழுத்திப்பிடிக்குமாறு கூறினார். நான் எனது ஒரு விரலை வாயுள் வைத்து அழுத்தும்போது அவர் தனது இரண்டு விரலையும் உள்ளே நுளைத்து இப்படி இல்ல அப்படி பிடியுங்க என்று கூறிவிட்டு சொல்லேக்க ஓம் எண்டுறது பிறகு வடிவா பிடிக்கிறது இல்ல என்று மீண்டும் புறுபுறுக்கத்தொடங்கினார். அவருக்கு இது தனக்கு தொடர்பில்லாத ஒரு வேலை போலவும், நாங்கள் அவருக்கு வந்துகரைச்சல் கொடுப்பது போலவுமே அவரது தொனி இருந்தது.
வெளியில் வந்து வேறு ஒரு உத்தியோகத்தரிடம் அவரைப்பற்றி வினவியபோது அவர் வேறு ஏதோ ஒரு பிரிவில் வேலை செய்வதாகவும் இது அவரிற்கு மேலதிக வேலை என்றும் தகவல் தெரிவித்தார். இத்தனைக்கும் D பிரிவில் நாம் இரண்டு பேரே அன்று X-Ray படம் எடுப்பதற்கு சென்றவர்கள். நான் முதலாம் இலக்கம், பிறகு வந்தவர் இரண்டாம் இலக்கம். இந்த இரண்டு பேரையும் 9.00 மணியில் இருந்து 11.00 மணிவரை காக்கவைத்ததுடன் இல்லாமல் X-Ray படத்தினை நீர் சொட்ட சொட்ட எந்தவிதமான பாதுகாப்பு உறைகளும் இல்லாமல் தந்தார்கள். அதை காய வைத்து எடுப்பதற்கு மேலும் பத்து நிமிடங்கள் சென்றது. X-Ray படம் பற்றிய அறிவு எமக்கு இருந்தபடியால் கெமிக்கல் காயாமல் தந்த படத்தினை விளிம்பில் பிடித்து கெமிக்கல் காயுமட்டும் வைத்திருதேன். இதுபற்றி அறியாத ஒருவர் என்றால் சாதாரண படத்தை பிடிப்பதுபோல பிடித்தால் நமது கைரேகை படத்தில் பதிந்துவிடும். பின்னர் திரும்பவும் பேச்சு வாங்கி படம்பிடிக்கவேண்டி வந்திருக்கும்.
இந்த விடயம் இன்று எனக்கு நடந்திருந்தாலும் இதுபோல பலருக்கு இவ்வாறான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான தேவையற்ற தாமதங்கள், நோயாளர்கள் எதிர்நோக்கும் தடுமாற்றங்கள் போன்றவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே இதனை இங்கு பதிவு செய்கின்றேன்.
யாழ் போதனா வைத்தியசாலை திறமையான ஒரு நிர்வாக பணிப்பாளரின் கீழ் இயங்கிவருவதாலும் இவ்வைத்திய சலையினை நவீனத்துவம்மிக்க வினைத்திறனுடைய மக்கள் சேவை நிலையமாக செயற்பட வைப்பதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் கடும் பிரயத்தனங்கள் காரணமாகவும் இவ்வாறான பல அடிப்படைப் பிரச்சினைகளை இனம்கண்டு அவற்றை சிரத்தையுடன் நிவர்த்தி செய்வார் என்கின்ற நம்பிக்கை எனக்குண்டு.
நோய்த்தாக்கத்திற்கு உள்ளானவர்களும் சாதாரண மனிதர்களே, அவர்களுக்கும் பல வேலைப்பளுக்கள், குடும்ப பொறுப்புகள் போன்ற பல அன்றாட பிரச்சினைகளுடன் எதிர்பாராமல் ஏற்படும் நோய்த்தாக்கங்களுடன் தமது வாழ்வை சவாலாக எடுத்து கொண்டுசெல்லவேண்டிய கட்டாயத்திலேயே இருப்பார்கள். அவ்வாறு வருபவர்களை அவர்களுக்கு வேறு வேலையே இல்லாதவர்கள் போலவும், அவர்கள் ஏதோ குற்றம் செய்ததால்தான் நோயாளி ஆகி தங்களிடம் சிகிற்சைக்கு வந்துள்ளார்கள் என்பது போலவும் நினைத்து அவ்வாறானவர்களை தேவையற்ற விதத்தில் காக்கவைத்து, அவர்களை குறைகூறி, அவர்களுக்கு மரியாதையின்றி ஏசி, அவர்களது மனத்தைரியத்தினை சிதைத்து அவர்களை இந்த நோய் வந்ததால் சமூகத்தில் தான் ஒரு குற்றவாளிபோல காணப்படுவதாக எண்ணவைக்கும் மனிதநேயமற்ற செயற்பாடுகளை தவிர்ப்போம்.
நன்றி


