வவுனியா – முல்லைத்தீவு நோக்கிய பேருந்து…. 75 வயதைத் தாண்டிய ஐயாமார் இருவர் …
வவுனியா – முல்லைத்தீவு நோக்கிய பேருந்து புளியங்குளம் சந்தித் தரிப்பிடத்தில் நிற்கிறது. 75 வயதைத் தாண்டிய ஐயாமார் இருவர் பேரூந்தில் ஏறிக்கொள்கின்றனர். நடத்துநருக்கு இறங்கவேண்டிய இடம் சொல்வதில் அவர்களுக்குள் குழப்பம். “கோயிலுக்கு..கோயிலுக்கு..கோயிலடி சந்தி…நெடுங்கேணியில் இறங்கவேணும்“ என்கின்றனர். நெடுங்கேணியில் கோயில் இல்ல. ஒட்டுசுட்டானிலதான் கோயில் இருக்கு. இறக்கிவிடுறன் – என்கிறார் நடத்துநர். இல்லை..இல்ல அந்த 108 பானை வச்சிப் பொங்கல் நடக்குது. அங்கதான் போகவேணும்“ என்று அவர்கள் சொல்ல, நான் வழியைச் சொன்னேன்.
முதுமையும் அதன் விளைவான பதற்றமும் அவர்களிடம் கொஞ்சமும் தென்படவில்லை. பேரூந்தால் இறங்கியும் கிட்டத்த 7 கிலோமீற்றர்கள் நிதானமாகக் கடந்தார்கள். அந்த நிதானநடையில் நம் முதுசம் எதையோ பார்க்கவும் – தொட்டுணரவும் பயணிக்கிறோம் என்கிற குதூகலம் அவர்களில் இருந்தது. அப்படியேதான் ஆலயத்திற்குள் பிரவேசித்ததும் அவர்கள் இருந்தனர். காட்டையும், காட்டில் உறைந்த தொன்மத்தடயங்களையும் தொட்டுத்தடவி ஆன்மத்தியானமேற்றனர்.
அவர்கள் இருவரும் முதியவர்கள். 75 வயதைக் கடந்தவர்கள்….!
வெடுக்குநாறி மலைக்கு வருகைதந்த இந்த இரு முதியவர்களின் மனநிலைதான் நம் இளையோருக்கும், அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் இன்று தேவைப்படுகிறது. வரலாற்றில் ஆயிரம் கதைகள் நமக்காகக் கிடப்பினும், அதை அப்படிய அரிந்தழிய விட்டு நீண்டதூரம் பயணப்பட்ட இனத்தின் கடைக்ககூற்றில் கிடந்தபடியேதான் இதை எழுதவும், எழுதியதை உணரவும் வேண்டியிருக்கிறது.
ஆம்..நம் மரபுரிமைகளையும், தொன்ம எச்சங்களையும் நோக்கி நடக்கவேண்டியிருக்கிறது. அவற்றின் பொருள்புரிய வேண்டியிருக்கிறது.
அதற்கான வாசல்களை நமக்குக் கிட்டிய கடவுள் அடிக்கடி திறந்துவிடுகிறார். மத்தளமலையில், கன்னியாவில், தென்னமரபடியில், செம்மலையில், குருந்தூர்மலையில், வெடுக்குநாறிமலையில் என வரவேற்பளிக்க கடவுளர்கள் காத்துநிற்கின்றனர். அதனை இந்துந்துவாவுடனோ, வேறெந்த மதவெறியுடனோ இட்டுநிரப்பி குழப்பிக்கொள்ள வேண்டாம். நமக்கென்று ஏதுமில்லை என நம்பிக்கையிழந்து கிடக்கும் களப்பிரக் குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்தல் மையங்களாக மரபுரிமைசார் கொண்டாட்டங்களைக் கொள்ளவேண்டும். அந்தக் கொண்டாட்டங்களூடாகப் பெறும் தகவல்களும், அறிவும் நம் இனத்துத் தொன்மையைத் மனதளவில் துலக்கமுறச்செய்யும் முரசாக மாற்றடையும். இந்த நோக்கோடு தொன்ம இடங்கள் நோக்கி எத்தனை பேர் பயணித்தனர் என்றெல்லாம் கணக்கிட முடியாது.
உண்மையில், நேற்றைய வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத் திருவிழாவுக்கு வருகைதருவதென்பது மிகுந்த அச்சவுணர்வுக்கும், பீதிக்கும் உரியதாக மாற்றப்பட்டிருந்தது. ஆலயக் காட்டுக்குள் நுழைவதற்கு முன்பான 3 கிலோமீற்றர் தொலைவுக்குள் இடத்தில் இராணுவத்தினரின், பொலிஸாரின் சோதணைகளைக் கடக்க வேண்டும். அதற்குள் வழமைபோன்ற கண்காணிப்புகள் வேறு. இரண்டு கிலோமீற்றர் தூரமான அடர் வனப் பயணத்துள் இராணுவமும், பொலிஸாரும் இடையிடையே நின்றால் எத்தனைபேர் அப்பயணத்தை விரும்புவர்…? 3 கிலோமீற்றர்களுக்கு அப்பால் பேரூந்துகள் செல்லமுடியாது. காட்டுக் கிரவல், சகதிப் பாதையில் நடந்தும், உழவு இயந்திரத்திலும்தான் செல்லமுடியும் எனக் கூறி ஆயுதமேந்தியவர்கள் குறுக்கே நின்றால் அப்பயணத்தைத் தொடர எத்தனை பேர் விரும்புவர்?
இவ்வளவு தடைகளையும் பொருட்படுத்தாமல் நடந்தும், ஓடியும், உழவு இயந்திரத்திலுமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து மக்கள் வந்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் வந்தனர். சமூக ஆர்வலர்கள் வந்தனர். அரசியல்வாதிகள் வந்தனர். சமயம்சார் அமைப்புக்கள் வந்தன. காட்டுக்குள் பரந்திருந்த வெளியெங்கும் நிறைந்தனர். சிவனுக்கு விழா எடுத்தனர். நம் வரலாறு தொடங்கிய இடங்களில் ஒன்றைப் பார்த்தனர். பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தனர். இனக்கனதியேற்ற மனிதர்களாய் மலையேறினர்.
ஆக இதுபோன்ற திருவிழாக்கள் கிராமந்தோறும் தேவைப்படுகின்றன. எங்கோ தவறவிட்ட நம் மரபுகளை, பண்பாட்டை மீளப்புதுப்பிக்கவும், நினைந்துருகவுமான ஆன்மவெளிகள் ஆங்காங்கே உருவாக்கப்படல்வேண்டும். அந்த ஆன்மவெளிகள் மனிதர்களைத் தம் இலட்சியத்தின்பால் ஓர்மம் மிக்கவர்களாக மாற்றும். மானுட வாழ்வின் நோக்கையும், எண்ணத்தையும் மடைமாற்றாத வழிபாடுகளும், வழக்கங்களும் நம்மிடையே ஏகப்பட்டளவில் உள்ளன. அவற்றைப் புதுப்பிக்கவும், மீளுருவாக்கவும் செய்யவும் வெடுக்குநாறிமலைகள் அவசியப்படுகின்றன.
உண்மையில், வெடுக்குநாறிமலை பற்றிய வரலாறு இன்னமும் துலக்கமற்றதாகவே காணப்படுகிறது. நான் அறிந்த அளவில் வடக்கு பகுதியில் இருக்கின்ற தொல்லியல் எச்சங்களில் தெளிவான எழுத்துக்கள் வெடுக்குநாறிமலையில் மட்டுமே உண்டு. நீண்ட வரிசையில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டானது தூயசிங்கள வரலாற்றை உருவாக்கப் பாடுபட்ட பேராசிரியர் பரணவிதானவினால் மட்டுமே வாசிக்கப்பட்டுள்ளது. பார்க்கர் என்ற ஆங்கிலேயே அறிஞர் இம்மலைக் கல்லெட்டுக்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் இந்திரபால ஒருமுறை (1970) இம்மலைப் பகுதிக்கு பயணம் செய்ததாகவும் தொன்மைக்கால கல்வெட்டு உள்ளதாகவும் மட்டுமே குறிப்பிடுகிறார். தமிழ் சாசனவியல் நன்கு வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில் புதிய வாசிப்பு வெடுக்குநாறிமலை கல்வெட்டுக்கு தேவைப்படுகிறது. வழமையாக இதுபோன்ற குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்களில், அந்தக் குகையை துறவிகள் வாழக்கூடிய வகையில் செதுக்கி, நீர்த்தடாகம் அமைத்துக் கொடுத்தவரின் பெயர் உள்ளிட்ட தகவல்களே பொறிக்கப்பட்டிருக்கும். வெடுக்குநாறிமலையில் பெரியவில் இக்கல்வெட்டு காணப்படுவதால் பெரியளவிலான வரலாற்றுச் செய்தியொன்று உள்ளிருக்க வாய்ப்புண்டு. ஏற்கனவே தொல்லியல் திணைக்களம் இக்கல்வெட்டுக்களை படியெடுத்துள்ளது. தொல்லியல் திணைக்களத்தின் வாசிப்பு எப்படி வரும் என்பதை குழந்தையும் ஊகித்து விளங்கிக்கொள்ளும். எனவே நம் முன் உயிரோடிக்கும் இந்த வரலாற்று எச்சம் சுயாதீனமான ஆய்வுக்குழுவொன்றின் வாசிப்பிற்குட்படுத்தப்படவேண்டும்.
அதேநேரத்தில் வழிபாட்டு உரிமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் சட்டரீதியான அனுமதியைப் பெற சட்டத்துறை சார்ந்தவர்கள் நடவடிக்கைகளை நடவடிக்கை எடுக்கவேண்டும். வெறுமனே வருடத்திற்கு ஒருமுறை என்றில்லாமல் எல்லா நாட்களிலும் சென்று வழிபடவும், ஆன்ம பலம் பெறவும்கூடிய வழிபாட்டுச் சூழலை அங்கு ஏற்படுத்த முறைப்படியான அனுமதி அவசியப்படுகிறது. அதனைச் செய்வார் யார்?
நன்றி
Jera Thampi

