புதினங்களின் சங்கமம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: இரு ஆஸ்திரேலியர்கள் பலி! இருவர் காயம்!! (Photos)

 

கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த 290 க்கு மேற்பட்டவர்களில் இரு ஆஸ்திரேலியர்கள் அடங்குவதாகவும் மேலும் இரு ஆஸ்திரேலியர்கள் காயமடைந்துள்ளதாகவும் பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட இருவரும் மனிக் சூரியாராய்ச்சி மற்றும் அவரது 10 வயது மகள் அலெக்ஸான்ரியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த இருவரும் 50 வயது மற்றும் 20 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்குத் தேவையான உதவிகள் தூதரகம் ஊடாக வழங்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரழந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 35 என குறிப்பிடப்படுகிறது.

இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி உயிரிழந்த வெளிநாட்டவர்களில் இருவர் ஆஸ்திரேலியர்கள், ஆறு பேர் இந்தியர்கள், மூன்று பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள், இருவர் துருக்கியர்கள், இருவர் அமெரிக்க – பிரிட்டிஷ் குடியுரிமை கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து, பல வெளிநாட்டவர்களுடனான தொடர்புகளை முற்றாக இழந்துள்ளதாக கூறியுள்ள கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள், தங்கள் நாட்டவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.