மாகாண சபை நீக்கம் தொடர்பான சரத் வீரசேகரவின் நிலைப்பாட்டுக்கு பொதுஜன முன்னணிக்குள் எதிர்ப்பு!
மாகாண சபைகள் தேர்தல் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட கருத்துக்கு சிறிலங்கா பொதுஜன முன்னணிக்குள் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாகாண சபைகள் இன்றி கடந்த காலங்களில் நாடு இயங்கியுள்ளது. அப்போது நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. இதனால் இந்த சபைகள் அவசியமானதா? என்று ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளதாக சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த, மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியத்தைச் சேர்ந்தோர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
“கூடிய சீக்கிரத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு நாங்கள் தற்போதைய அரசுக்கு கோரிக்கையை முன்வைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். அதேபோன்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர மாகாண சபைகள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்கு எமது அதிருப்தியை வெளியிடுவதற்கும் நாங்கள் ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளோம்” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

