உடல் முழுவதும் காயங்களுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு !! (Photos)
25 ந் திகதி காலை வேட்டைக்கு சென்றவர் 27 ந் திகதி மத்தியான நேரம் அரை நிர்வாண கோலமாய் சிதைந்த உடலாக மீட்கப்படுகிறார், உடல் கிட்டத்தட்ட ஐம்பது வீதத்திற்கு மேல் சீரழிந்திருந்தது, போட்டிருந்து முழுநீள கை ரீசேட்டும், நாவல் நிற செருப்பும், கட்டைப்பிடி கோராரியும் , ஒன்டரை லீட்டர் தண்ணீர் போத்தலும் ஆளை அடையாளம் காண உதவியது.

முப்பது வருட போராட்ட சூழல் சாதாரண குடும்ப விவசாய தந்தையின் பிள்ளையான அந்த நபரை வாழ்வாதாரத்துக்காக விலங்கு வேட்டைக்காகவும், தேனுக்காகவும், கம்புதடி வெட்டுவதற்காகவும் அந்த அடர காடு அழைத்திருந்தது அதுவே வாழ்நாள் சீவியமாகவும் போயிருந்தது.
வழமை போல தேனுக்காக 25ந் திகதி காலை வளர்ப்பு வேட்டை நாயுடன் விளாத்திக்குளம் காட்டிற்குள் நுழைந்தவர் யானை லத்திகளும் பாத அடையாளங்களும் நிறைந்த பெரும்பாதை கடந்து காட்டின் ஒற்றையடி பாதையூடாக கிட்டத்தட்ட அஞ்சாறு கிலோமீட்டர்கள் நடந்து கல்மடு ஆற்றின் கிளை ஆற்றை கடந்து ஆற்றின் மறுபுறம் பாலாவியடி காட்டிற்குள் நுழைந்து தேன் தேடும் வேலையை ஆரம்பித்திருக்க வேண்டும்.
கோடை கால வெய்யிலில் இரைக்காகவும் நீருக்காவும் வெளியே வந்த கரடியால் / கரடிகளால் குறித்த நபர் தாக்கப்பட்டிருக்க வேண்டும். இரவாகியும் வீடு திரும்பாத நபரால் ஊரே சஞ்சலப்பட அன்றிரவே தேடும் பணிகள் ஆரம்பமானது, அவரின் இயங்கிய தொலைபேசியும் அணைந்திருந்தது கூடச்சென்ற நாயும் வீடு திரும்பியிருந்தது. இரண்டாம் நாள் இன்னும் மும்முரமாக பெரியவர்கள், பொடியள்மார் , காட்டின் உள் வழி தெரிந்தவர்கள் என பலரும் காட்டை சல்லடை போட்டு நடு இரவு வரை தேடியும் பயன் கிடைக்கவில்லை. போதா குறைக்கு மழையும் பெய்தோய்ந்து.
மூன்றாம் நாள் தேடுதலும் இரண்டாம் நாளை போலவே வேகமாகவும் மனங்களில் அச்சங்களுடனும் ஆரம்பமாகியிருந்து கிட்டத்தட்ட ஒன்டரை மணியளவில் கரடியுடன் உயிருக்கு போராடி மரங்களில் ஏற முயன்றிருந்தும் முடியாமல் பெரும் பாலை மரத்தடியிலேயே சடலமாக உறவினர்களால் கண்டுபிடிக்கப்படுகிறார்
கிட்டத்தட்ட உடலை கரடியும், பின்னர் பெய்த மழையும் சீரழித்திருந்தது. கரடியுடன் போராடியதை ஆங்காங்கே கிடந்த அவரது கோவில் நூல்களும், அறுநாக்கொடியும் , செருப்பும் சொல்லியது. கரடி தனக்கே உரித்தான பாணியில் கண் , முகம், ஆணுறுப்பு என்பவற்றை சிதைத்திருந்தது. முப்பத்தாறு மதிக்கத்தக்க ஆம்பிளையை ஆரும் இல்லாத காட்டினுள் கரடி/கரடிகள் கூறுபோட்டிருந்தன.
திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் மகனை இனங்காட்ட வந்த தந்தை சொல்லி அழுகிறார்
” எல்லா இடத்திலயும் மகன் இருக்க தகப்பன் சாவாங்கள் இங்க மட்டும் நானிருக்க மகன் செத்துப்போய்ட்டான்”
மனம் கனக்கும் வேலை நாட்கள் ?
வவுனியான விளாத்திக்குளம் பகுதியில் உள்ள காட்டிற்கு தேன் எடுக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த சிறிரங்கன் வியேந்திரன் (வயது 36) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:-
குறித்த நபர் காட்டுப்பகுதிக்கு சென்று கடந்த இரண்டு தினங்களாக வீட்டிற்கு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் காட்டுப்பகுதியில் அவரைத்தேடியுள்ளனர்.
இதன்போது காட்டுப்பகுதியில் பாரிய காயங்களுடன் சடலமாக அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மடு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இவர் தேன் எடுப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றநிலையில் கரடியின் தாக்குதலிற்குள்ளாகி மரணமடைந்திருக்கலாம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

