புதினங்களின் சங்கமம்

பருத்தித்துறை, தும்பளை கடற்கரை வரை வந்து நிற்கிறது சிங்கள வாடிகள்

யாழ் வடமராச்சியின் பருத்தித்துறை, தும்பளை கடற்கரையில் அத்துமீறி அமைக்கப்பட்டிருந்த சிங்கள மீனவர்வாடிகள் சில தீக்கு இரையானதாக செய்திகள் சமீபத்தில் வெளியாகின. அண்மையில் மூத்த பல்கலைக்கழகப் பேராசியிரயர் ஒருவருடன் எமது மக்களின் பொருளாதார மேம்பாடு குறித்துப் பேசியபோது, எமது மீனவர்களின் இன்றைய நிலையை அதீத கவலையுடன் விபரமான பகிர்ந்து கொண்டார்.

வணங்கா மண்ணாம் வன்னி பெருநிலப்பரப்பின் வளம் கொளிக்கும் மணலாற்றுப் பிரதேசம், நல்லாட்சியில் கொண்டுவரப்பட்ட பாராளுமன்ற தீர்மானம் ஒன்றின் கீழ், வனவளப்பிரிவினால் அபகரிக்கப்பட்டு அங்கிருந்த மக்களும் வலோத்காராமாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது விரைந்த சிங்கள குடியேற்றங்களின் மகாவலி “எல்” வலய பிரதேசமாக அது மாறிநிற்கிறது. அதேவேளை கொக்குளாய், கொத்குத்தொடுவாயில் இருந்து தற்போது அலம்பில், முல்லைத்தீவு கடந்து வட்டுவாகல் வரை சிங்கள மீனவர் வாடிகயால் நிறைந்து கிடக்கிறது.

இப்பகுதி தமிழ் மீனவர்கள் தங்கள் தொழிலைச் செய்வதில், இதனால் பலத்த சவாலை எதிர்கொள்கின்றனர் என்றார். அதேவேளை மறுபுறத்தில் மன்னார் முள்ளிக்குளத்தில் அங்கு நிலைகொண்டுள்ள கடற்படையின் துணையுடன் வாடி அமைத்துள்ள சிங்கள மீனவர்கள், அப்பகுதியில் உள்ள தமிழ் மீனவர் குடும்பங்களை காட்டுக்குள் விரட்டிவிட்டு, மன்னார் வளைகுடாவில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு முல்லைத்தீவு, மன்னார் தமிழ் மீனவர்கள் நிலை வாழ்வியலைத் தொலைத்து விட்டதாக நிற்கிறது என்றால் யாழ். மீனவர்கள் கடலில் இறங்கினால் இந்திய மீனவர்கள் றோலர் சகிதம் பெரும் எடுப்பில் நிற்கிறார்கள்.

தற்போது யாழிலும் கடற்கரைகளை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர் என்பதன் செய்தியே பருத்தித்துறை மற்றும் தும்பளை கடற்கரைகளில் சிங்கள மீனவர் வாடிகள் எரிப்பு விடயம். சரி கடந்த நவம்பர் முதல் தமிழர் ஒருவரே கடற்தொழில் அமைச்சராக இருக்கிறாரே? என்ற கேள்வியை ஒருவர் அவரிடம் எழுப்பியபோது, “அவரும் என்னுடனும் பேசினார். இவ்விடயங்களை நான் அவரிடமும் சொன்னேன். அவரால் இது குறித்து எதுவும் செய்ய முடியும் என்று நினைக்கின்றீர்களா?” என்று யதார்த்தமான அந்தக் கேள்வியை பேராசிரியர் கேட்டார்.

சிங்கள இனவாத பெரும் தேசியத்தை அடையாளப்படுத்தி நிற்கும் ஒரு அரசின் கீழ் இருப்பவர் அவர் தமிழ் அமைச்சர் என்ற பெயரைக் கொண்டாலும் அவரும் அவர்களின் விருப்பை நிறைவேற்றுபவராக இருக்கலாமே அன்றி நீதியின் தரிசனமான மக்களின் காவலனாக இருக்க முடியுமா என்ன? இந்நிலையில் தான் தமிழ் மீனவ சொந்தங்களின் வாழ்வியலும் சிதைத்து சின்னாபின்னமாக்கப்படுகிறது.

நன்றி  Nehru Gunaratnam பேஸ்புக்