புதினங்களின் சங்கமம்

பெறுநர் : மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் -இலங்கை தமிழரசு கட்சி – ஐயா

13-08-2020

வணக்கம் ஐயா,

இம்மடல் உங்கள் கைகளுக்கு கிடைக்கும் என்பதை நான் நன்கறிவேன். அப்படியே இதனை கொண்டு வருபவரிடம் ஒரு பதில் மடலை கொடுத்து விடுவீர்கள் என நம்புகின்றேன்.

இம்மடல் படித்த பின்னர் என்னில் பலருக்கு கோபம் வரலாம். அல்லது, இவன் என்னடா திடீரென கட்சி மாறி விட்டான் என எரிச்சல் படலாம். அல்லது என்னை விரட்டி விரட்டி கல்லால் அடிக்க தோணலாம். இருந்தும், எனக்கு தெரிந்த யதார்த்தத்தை நான் சொல்ல முனைகின்றேன்.

நீங்கள் யார் ? என் சகோதரர்கள் அனைவரையும் போல் ஈழதேசத்தில் பிறந்த ஒரு ஈழத்தமிழன். தங்கள் படிப்பின் மூலம், ஒரு மாபெரும் வழக்கறிஞர். மும்மொழி வித்தகர். உலக அரசியல் ஞானி. அப்படியிருக்க, நீங்கள் பாராளுமன்றம் செல்ல உங்கள் மக்களாலேயே ஏன் இந்த பெரும் எதிர்ப்பு ? காரணம், நீங்கள் விடுதலைப் போராட்டத்தை பற்றி அங்கும் இங்குமாக மாறி மாறிப் பேசிய சில வார்த்தைகள். அது உங்கள் சொந்த கருத்தாக இருந்த போதும், பொதுவெளியில், மக்களின் பிரதிநிதியாக நீங்கள் வர நினைத்த போது மக்களுக்கு உங்கள் கருத்தை எதிர்த்து விமர்சிக்க சுதந்திரம் இருக்கு. அடுத்தது, நீங்கள் ஐ.நா வில் உரைத்த விடயங்கள் இன்னமும் உங்களில் பல விமர்சனங்களை வைத்ததும் நீங்கள் அறிவீர்கள். உங்களை ஏராளம் வாக்கு வித்தியாசங்களால் வெல்ல வைக்கவில்லை மக்கள் என்பதில் இருந்து உங்களுக்கு புரிந்திருக்கும், மக்கள் அனைவரும் சேர்ந்து உங்களை ஆதரிக்கவில்லை என்று. அத்துடன் யாழ்.மத்திய கல்லூரி வளாகத்தில் நடந்த பிரகளையம் அதனை இன்னமும் அடிக்கோடிட்டு காட்டியது.

நீங்கள் கள்ள வாக்கில் வென்றதாக பலர் சொல்கின்றனர், ஆனால் அது பிழையான கதை என நீங்கள் பேட்டி கொடுத்து விளக்கமும் சொல்லி இருந்தீர்கள். ஆனாலும் சகோதரி சசிகலா, சித்தார்த்தன் அண்ணா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களுடைய கருத்து உங்களுக்கு சாதகமாக அமையவில்லை. உண்மையான நிலைப்பாடு ஊர்ஜிதமாக்கப்படாத நிலையில், எது சரி எது பிழையென ஒரு முடிவிற்கு நான் வந்துவிடவில்லை. அதனால் நீங்கள் கள்ள வாக்கில் வென்றதாய் சொல்லும் பலருக்கு நான் சிவப்பு கொடி காட்டவுமில்லை. நல்ல வாக்கில் வென்றதாய் சொல்பவர்களுக்கு பச்சைக்கொடி காட்டவும் இல்லை. எது எப்படியோ, நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பிரகடனப்படுத்தப்படும் நாழியிலிருந்து அடுத்த ஐந்து வருடங்களும் இந்த விடயத்தை தொடர்ந்து பேசுவதால் ஏதும் நடக்கப்போகுதா என்றால், என்னிடம் அதற்கு விடையில்லை. “இல்லை” என்று மட்டுமே உணர முடிகின்றது.

இப்போது விடயத்திற்கு வருகின்றேன். ஆயுதப்போராட்டம் பற்றிய உங்கள் கருத்தில் உங்களை நோக்கி வீசப்பட்ட விமர்சனங்களுக்கான உங்களுடைய பதில் “சாணக்கியம் தேவை” எனும் விதத்தில் கொடுக்கப்பட்டது. அதாவது, இலங்கை அரசுடன் பேசி, தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுத்தர, நாம் அவர்களுடய, “ஆயுதப்போராட்டம் பிழையானது” என்ற கருத்தோடு உடன்படவேண்டும் என்றும், இதை சாணக்கியமாய் தான் செய்ய வேண்டும் என்றும் தான் நான் உங்களை விளங்கிக் கொண்டேன். அதனால் தான் உங்களை லண்டன் மாநகரில் சந்தித்து பேசியவர்களில் சிலர் உங்கள் சாணக்கிய பார்வையை நம்பி தங்கள் முகப்புத்தக முகப்புப் படத்தில் உங்களை ஏற்றினார்கள்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்கள் படங்கள் ஏந்திய அவர்களது முகப்புகளை எங்கள் ‘தாய்ப்புலியின்” படங்கள் அலங்கரித்தவை. அந்த இடத்தில் உங்களையும் கொண்டு போய் வைக்கும் அளவு உங்கள் பேச்சை நம்பினார்கள். ஆனாலும், நீங்கள் நாடு திரும்பிய பின் பேசியவைகள் அவர்களை உங்களில் அதீத வெறுப்பு கொள்ள வைத்தது என்பதை கொஞ்சம் நீங்கள் சிந்திக்க வேண்டும் ஐயா.

அதே லண்டன் மாநகரில் உங்களை சூழ்ந்த ஒரு இளைஞர்கள் கூட்டம், உங்களை பேசாமல் வெளியேறு, நீ தமிழ்த் துரோகி என கோபத்தில் கத்தினார்கள், அது உங்களுக்கு உறைத்திருக்க வேண்டும், எம்மவர்கள் குளிர் தின்று நடாத்திய போராட்டமானது மெளனித்த கோபமும், எமக்கு நீதி கிடைக்கவில்லையே என்ற எரிச்சலும், மாவீரச் செல்வங்களின் ஆத்மா அமைதி கொள்ளவில்லையே என்ற ஆதங்கமும் தான் ஐயா. புலம்பெயரில் உள்ளவனால் கத்திச் சொல்லவாவது முடிகின்றது. நாட்டில் உள்ளவனுக்கு அதற்கு கூட உரிமையில்லாமல் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களில் அந்த அடக்கிய கோபங்கள் தானய்யா அழுகையாய் வெடித்து, கண்ணீர் ஆறாய் ஓடுகின்றது. எம் இனத்தின் இந்த ஆறாத வடுக்களுக்கு உங்கள் போன்ற, எம் இனத்தில் பிறந்த ஆளுமைகள் தானே ஐயா மருந்தாகி வருட வேண்டும். மாறாக இன்னமும் சினம் கொள்ளவும், ஆறாத புண்களை தோண்டி தோண்டி ரணம் கொள்ளவும் வைப்பது நியாயமில்லை தானே ஐயா.

என்னைப் பொறுத்த மட்டில் உங்களுக்கு பணம் ஒரு பொருட்டு இல்லை. அதனை உங்கள் தரமான படிப்பு நன்றாகவே கொடுக்கும். பதவி மோகம் தேவையே இல்லை. “ஜனாதிபதி வழக்கறிஞர்” எனும் பெருமையை விடவா ஒரு பதவி தேவை ?
ஆதலால், நீங்கள் இவ்வளவு இடர்களையும் வெறுப்புகளையும் தாண்டி பாராளுமன்றம் செல்வது உங்கள் சாணக்கிய ஆளுமையால் எம் மக்களுக்கான உரிமைகளை பெற்றுத்தந்து, உங்களை விமர்சித்த எம்மவரையும் உங்களை நோக்கி கைகூப்ப வைக்க என்றே நான் நம்புகின்றேன் ஐயா.
அதனை அடுத்த ஐந்து வருடங்களுக்குள் நீங்கள் நடாத்தி காட்டி எங்களை ஆச்சரியப் படுத்துங்கள் ஐயா.

இலங்கை தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தானய்யா ஈழத்தமிழர்களின் மூச்சுக்காற்று. அதனை சிதையாமல், சீரழியாமல் பாதுகாப்பது உங்கள் போன்றவர்களின் தலையாய கடமை அல்லவா ? மாறாக, நீண்ட காலமாக எம் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மாவை ஐயாவையே உதாசீனம் செய்வது எவ்வளவு ஒரு வரலாற்றுத் தவறு. உங்களுக்கு புத்தி சொல்ல நான் உங்களிலும் விட அறிவானவன் அல்ல. ஆனாலும் ஒரு கணம் ஆற அமர்ந்து சிந்தியுங்கள். உலகத்தமிழர்களின் மனமார்ந்த வாழ்த்துகளை உங்களுடயதாக்க உங்களுக்கு காலம் இடம் தந்துள்ளது.
அண்ணனுக்கு பிறகு ஒரு வெற்றிடம் சும்மா தான் கிடக்கு. அது கூட உங்களுக்கு சாத்தியப்படும் இடத்தை காலம் கையளித்துள்ளது. அவர் உயரத்தை தொட முடியாது தான். இருப்பினும் அதற்கு அடுத்த இடம் இன்னமும் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பதே உண்மை. உங்களை சிறிதரன் அண்ணா அவர்கள் அன்ரன் பாலசிங்கம் ஐயாவுடன் ஒப்பிட்டுப் பேசியதை நியாயப்படுத்த இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் பாவித்தால், ஈழத்தமிழர் வரலாற்றில் உங்களுக்கான இடத்தை அசைக்க ஆள் இல்லை என்பதை ஒரு கணம் யோசித்து விடை காணுங்கள்.

முன்னொரு நாள் முள்ளிவாய்க்காலில் விளக்கேற்றி விட்டு வந்து கொண்டிருக்கையில் வீதியோரம் வாகனங்களை மறித்து சீருடைச் சிங்களவர்கள் எங்களுக்கு எலுமிச்சைச்சாறு கொடுத்தார்கள். அதற்குள் என்ன அரசியல் இருந்தது என்பதைத் தாண்டி, அந்த மனிதர்களின் கண்களில் எங்கள் வலிகளை உள்வாங்கிய உணர்வு எனக்கு தெரிந்தது. மனிதம் கொண்டவர்கள் நிறையப்பேர் சிங்களவர்களிடமும் உண்டு ஐயா. ஆனால் நாம் இங்கு வீடு, சைக்கிள், தென்ன மட்டை, பனங்கொட்டை என பிளந்து போய்க் கிடக்கின்றோமே. உங்கள் போன்றவர்கள் நினைத்தால் நாம் ஒரு குடைக்குள் வரலாம். எம் மண்ணிற்காக தம்முயிர்களை தாரைவார்த்தவர்கள், சொந்த பந்தங்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்கள், வழியின்றி திசைமாறி ஏதிலிகளாய் ஆனவர்கள் என எல்லோருடைய கனவுகளையும் நிறைவேற்றி “கரிகாலன்” கனவு கண்ட தேசத்தை நிறைவேற்றி நிறைவு கொள்ளலாமே.

அன்றொரு நாள் சிறையில் வாடும் என்னவன் ஒருவனின் புத்தக வெளியீட்டிற்கு உங்களை கெளரவ விருந்தினராக நான் அழைத்திருந்த சமயம் உங்கள் தமிழ்த்தேசிய தொலை நோக்கை நான் ஆச்சரியத்துடன் பார்த்து நின்றவன். அன்று உங்களை யாரென்றே தெரியாதவனெல்லாம் இன்று உங்கள் பக்கம் நின்று கொண்டு எனக்கு வகுப்பெடுக்க முயற்சிக்கும் அளவிற்கு உங்கள் செயற்பாடுகள் சென்று விட்டதில் உங்களில் பெருவெறுப்பு கொண்டவர்களில் நானும் அடக்கம். ஆனாலும் என் ஆழ்மனது சொல்கின்றது, நீங்கள் ஈழத்தமிழன். இனமானம் கொண்டவனாக இருந்தே ஆக வேண்டும். தனிமனித இலாபம், வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இனத்தை விற்கும் ஆள் நீங்கள் இல்லை என நான் ஆணித்தரமாய் நம்புகின்றேன் ஐயா. இம்மடலை படித்து விட்டு, கடிதத்தின் நோக்கம் புரியாமல் என்னை சகட்டுமேனிக்கு திட்டுபவர்களையும் உங்கள் இனிவரும் செயல்கள் ஆச்சரியப்படுத்தட்டும் ஐயனே.

2020 அமைச்சரவை அமர்வில் கொழும்பில் பறந்த தேசியக்கொடியில் சிறுபான்மை இனத்தவர்களுக்கான இலட்சனைகளை காணவில்லை. உள்ளே பெளத்த பிக்குமார்களை தவிர வேறு மதகுருக்கள் இருக்கவில்லை என்ற கேள்விக்கு நீங்கள் அளித்த பதிலே என்னை உங்களுக்கு மடல் வரைய எத்தனித்தது. உங்கள் வருத்தமும் கண்டனமும் என்னை திருப்திப்படுத்தியது.

டொனால்ட் ட்ரம்ப் என்பவர் வெறும் காட்சிப் பொம்மை தான். அந்த நாட்டின் ஒவ்வொரு அசைவும் அமெரிக்க ஆதிக்க வல்லுனர்களுடையதே. அப்படியே தான் இலங்கையும். என்னதான் ராஜபக்சே சோதரர்கள் மார்தட்டி நின்றாலும், ஆட்சியை நகர்த்துவதும் காட்சியை கொடுப்பதும் சிங்கள பெளத்த ஆதிக்க வல்லுனர்களே.
அதனை வட்டுக்கோட்டை பிரகடனத்தில் இருந்து, வல்வெட்டி நாயகன் மெளனிப்பு வரைக்கும் வரலாறு சொல்கின்றது.

நான் உங்கள் மீது கொண்ட வெறுப்பும் கோபமும் இன்னமும் அப்படியே இருக்கின்றது. ஆனாலும் உங்கள் இனிவரும் ஒவ்வொரு அசைவும் என் போன்ற தம்பிகளின் மனநிலையை மாற்றும் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது. அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றி எம் இனத்திற்கு ஆவன செய்வீர்கள் என பணிவன்புடன் வேண்டுகின்றேன்.

STF பாதுகாப்பு இல்லாமல் எங்கள் மண்ணில் நீங்கள் கால்வைக்கும் நாளை எதிர்பார்த்த வண்ணம்….

இவ்வண்ணம்,
புலம்பெயர் ஏதிலி.