புதினங்களின் சங்கமம்

குற்றவியல், பயங்கரவாத தடைச் சட்டங்களின் கீழ் கருணாவுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்குக! – சம்பிக்க ரணவக்க

“ஒரே இரவில் 3 ஆயிரம் இராணுவத்தினரைத் தான் கொலைசெய்தாக முன்னாள் பிரதி அமைச்சர் உறுப்பினர் கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பிரதான சாட்சியமாகும். அவரே அவரது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதால், அவருக்கு எதிராக குற்றவியல் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டங்களின் கீழ் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

“இனவாத அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் ராஜபக்சக்களின் அரசுக்கே ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கும் கருணா, கிழக்கில் தமிழ் மக்கள் முன்னிலையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொலைச் செய்ததாக குறிப்பிட்டு தன்னை ஒரு வீரனாக சித்தரித்து , தமிழீழ விடுதலைப்புலிகளின் வீரனாகவே நாடாளுமன்றத்தில் கால்பதிக்க முயற்சிக்கின்றார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு இனவாதத்தைக் காண்பித்தே செயற்பட்டு வருகின்றது. இராணுவத்தினர் தம்மிடம் இருப்பதாகக் காண்பித்துக்கொண்டு இனவாத அரசியல் செயற்பாடுகளை தெற்கில் மேற்கொள்கின்றார்கள். ஆனால், பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு தனது ஆதரவை பெற்றுக்கொடுப்பதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களுள் ஒருவராக இருந்த கருணா அம்மான் தான் ஆனையிறவில் ஒரே இரவில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரைக் கொன்று குவித்ததாக கிழக்கில் பிரசாரம் செய்துள்ளார்.

இவர் கிழக்கில் தமிழ் மக்கள் முன்னிலையில் தன்னை ஒரு வீரனாகக் காண்பித்துக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிறந்த வீரராகவே நாடாளுமன்றத்துக்கு வர முயற்சிக்கின்றார். இவருக்கு எதிரான பல குற்றச்சாட்டுகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டாலும் , போதியளவான சாட்சிகள் கிடைக்கப் பெறவில்லை. ஆனால், தற்போது அவரே வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதனைப் பயன்படுத்தி அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தநிலையில் போர்க்களத்திலிருந்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா , மேஜர் ஜெனரால் சுமித் அத்தபத்து மற்றும் மேஜர் ஜெனரால் ரணவக்க போன்ற இராணுவ அதிகாரிகள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டுள்ளனர் என்பதையும் மக்களுக்குக் கூற விரும்புகின்றோம்.

2015ஆம் ஆண்டு நாட்டு மக்கள் நல்லாட்சி அரசுக்கு ஆணை பெற்றுக் கொடுத்திருந்தனர். கடந்தகால ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே இந்த ஆணையை மக்கள் வழங்கியிருந்தனர். ஆனால், அந்த நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, நல்லாட்சி அரசிலே மத்திய வங்கி பிணைமுறி மோசடியும் இடம்பெற்றது. அர்ஜூன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு நானும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுமே எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம்.

இந்தநிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான கே.பியை அழைத்து வந்ததுபோல் அர்ஜூன மகேந்திரனை அழைத்து வருவதாக பொய் உரைத்து ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொண்டு அதனூடாகப் பிரதமரான மஹிந்த ராஜபக்சவுக்கு தாம் கூறியதைப் போன்று அர்ஜூன மகேந்திரனை அவ்வாறு அழைத்து வருமாறு நான் சவால் விடுகின்றேன்.

மத்திய வங்கி மோசடியுடன் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகின்றேன். இந்த நடவடிக்கைகளுக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் நாங்கள் பெற்றுக்கொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்” – என்றார்.