யாழில் போதைப் பொருள் வியாபாரி பொம்மைவெளி டானியல்’ கைது ?
உயிர்க் கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை யாழ்ப்பாணம் மாநகரில் இளைஞர்களுக்கு விநியோகித்து வந்த “பொம்மைவெளி டானியல்” யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் வைத்து 520 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளிடன் சந்தேக நபர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று மாலை முற்படுத்தப்பட்டார்.
“யாழ்ப்பாணம் மாநகரில் இளைஞர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்து வந்த ‘பொம்மைவெளி டானியல்’ நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்தார். பொலிஸாருக்கு டிமிக்கிவிட்டு வந்த சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விற்பனையைத் தடுக்க சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்கவேண்டும்” என்று பொலிஸார் சமர்ப்பணம் செய்தனர்.
“எனது பெயரும் டானியல்தான். ஆனால் பொலிஸாரால் தேடப்படும் போதைப்பொருள் வியாபாரி பொம்மைவெளி டானியல் நான் இல்லை” என்று சந்தேக நபர் தெரிவித்தார்.
வழக்கை ஆராய்ந்த நீதிவான் சந்தேக நபரை வரும் ஜூலை 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

