புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையை கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கு பலர் எதிர்ப்பு!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையை கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் புத்திஜீகள் எனப் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் இன்று (15-06-2020) பகல் 10 மணிக்கு அக்கராயன் குளம் வைத்திய சாலையில் நடைபெற்ற கூட்டத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமையினை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலிற்கமைவாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை கொவிட் – 19 சிகிச்சைக்கான வைத்தியசாலையாக மாற்றும் வகையில் அண்மையில் மத்திய சுகாதார அமைச்சில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலினையடுத்து கொரோனா சிகிச்சை மையமாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையை ஸ்தாபித்தல் தொடர்பான கலந்துரையாடல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் கடந்த வாரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கிளிநொச்சியில் நடைபெற்றது.

இதனையடுத்து பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் இன்று (15-06-2020) பகல் 10 மணிக்கு அக்கராயன் குளம் வைத்திய சாலையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது இதுவரை காலமும், அக்கராயன் வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த அனைத்து வைத்திய சேவைகளும் நிறுத்தப்படுவதெனவும் வெளிநோயாளர் பிரிவு சேவையை மாத்திரம் ஸ்கந்தபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற ஒரு பொதுநோக்கு மண்டபத்தில் சாதாரண சிகிச்சைகளை மாத்திரமே வழங்க முடியுமெனத் தெரிவித்த பொது அமைப்புக்கள் அதுவும் எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு அடிப்படை வசதிகளற்ற ஒரு கட்டடத்தில் சேவையை வழங்க முடியும்.

அடிப்படை போக்குவரத்து வசதிகளற்ற 15இற்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் இவ் வைத்திய சாலை அமைந்துள்ளது. எதிர்வரும் காலங்கள் பருவமழை காலம் என்பதால் போக்கு வரத்துக்கள் கூட வாரக்கணக்கில் தடைப்படுகின்றமை வழமையானது.

இவ்வாறான நிலை ஏற்பட்டால் இந்த மக்களின் நிலை என்ன என்றும் பிரதேச மக்கள், பொது அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. மாகாண அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்று இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அவர்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.சரவனபவன் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையின் பணிப்பாளர் அக்கராயன் பிரதேச வைத்தியசாலை பணிப்பாளர் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.