சயனைற் குப்பியுடன் முகமாலையில் எலும்புக்கூட்டு எச்சம் மீட்பு! (Video)
போரில் நெருக்கடி நிலை ஏற்படும் சூழலில் தற்கொடை செய்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகள் அணிந்திருக்கும் சயனைற் குப்பி மற்றும் விடுதலைப்புலிகளின் அடையாளங்களுடன் முகமாலைப் பகுதியில் பெண் போராளி ஒருவருடையது எனக் கருதப்படும் மனித எச்சங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்படுவதாக பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அவற்றை அகழ்வதற்கு பொலிஸார் நீதிமன்றின் உதவியினை நாடியிருந்தனர்.
நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு அமைய மாவட்ட நீதவான் முன்னிலையில் கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போதும் பெண்கள் அணியும் ஆடைகளுடன் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுத தளபாடங்களுடன் எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
Related:
முகமாலையில் காணப்பட்ட மனித எச்சம் சோதியா படையணி போராளியுடையது? (காணொளி)
அவற்றுடன் காணப்பட்ட விடுதலைப்புலிகள் தமது அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்துகின்ற இலக்கத்தகடும் மீட்கப்பட்டிருந்தது. குறித்த தகட்டில் காணப்பட்ட எழுத்துக்கள் விடுதலைப்புலிகளின் பெண்கள் படையணியான சோதியா படையணிக்குரியது என்று முன்னாள் போராளிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்றும் த வி பு ஞா – 109 என்ற இலக்கமுடைய தகடு ஒன்றுடன் பெண்களின் ஆடைகள் மற்றும் பச்சை நிறத்திலான சீருடைகள் என்பவற்றுடன் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மீட்கப்பட்டவரும் சோதியா படையணிப் போராளியாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
இன்றைய அகழ்வின் போது வெடிக்காத நிலையில் காணப்பட்ட 40mm குண்டு, கைக்குண்டு, மகசின் 02, தோட்டாக்கள் 34 உட்பட்ட வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ள.
அவற்றில் குண்டு மற்றும் கைக்குண்டு என்பவற்றை செயலழிக்கச் செய்யமுடியாது என்பதால் அவற்றை அழிக்குமாறு சம்பவத்தினை நேரில் பார்வையிட்டிருந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் த.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய அகழ்வு நடவடிக்கை மாலை 5.30 மணியளவில் இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் 09ஆம் திகதி மீண்டு முன்னெடுப்பதற்கும் நீதிபதி பணித்துள்ளார் என்று அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

