புதினங்களின் சங்கமம்

காட்டேறியால் கடத்திச் செல்லப்பட்டாரா 44 வயதுப் பெண்!! முல்லைத்தீவுக் காட்டில் பரபரப்பு!!!

காட்டுப் பகுதியில் காணப்படுகின்ற கீரை வகை ஒன்றை பறிப்பதற்காக காட்டிற்குள் சென்ற பெண் ஒருவர் ஆறு நாட்கள் காட்டில் சிக்கிக்கொண்ட சம்பவம் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மல்லாவி ஒட்டங்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த குணசிங்கம் கனகமலர் (வயது 44)என்ற பெண் கடந்த 04ஆம் திகதி தனது வீட்டிற்கு அண்மையாக உள்ள காட்டுப்பகுதியில் கீரை வகை ஒன்றை பறிப்பதற்காகச் சென்றிருக்கின்றார்.

அவரை தொடர்ந்து தேடியும் கண்டுபிடிக்க முடியாத குடும்பத்தினர் மல்லாவில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேவேளை அயல் கிராமங்களுக்கும் தகவல் வழங்கியிருந்தனர். இந்நிலையில் ஆறு நாட்கள் கடந்த நிலையில் 10ஆம் திகதி ஒட்டங்குளத்தின் அயற்கிராமங்களில் ஒன்றான பெரியமடு காட்டுப் பகுதியில் குறித்த பெண்ணை அவதானித்த அந்தக் கிராமத்து மக்கள் உடனடியாக தமக்கு தகவல் வழங்கியிருந்த கனமலரின் குடும்பத்தாரைத் தொடர்புகொண்டு தகவல் வழங்கியிருக்கின்றனர்.

பின்னர் குடும்பத்தார் பெரியமடு பகுதிக்குச் சென்று குறித்த பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

தற்போது பாலைப்பழக் காலம் என்பதால் பாலைப்பழம் மற்றும் காட்டில் காணப்பட்ட உணவுப் பொருட்களை உண்டு தனது பசியைப் போக்கியதாகத் தெரிவித்துள்ள கனகமலர், அந்தக் காட்டில் யானை, கரடி உட்பட்ட ஆபத்தை விளைவிக்கவல்ல விலங்குகளை தான் கண்டதாகவும் அவை தனக்கு ஆபத்தை விளைவிக்கவி்ல்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.

முன்னைய காலங்களில் காட்டிற்குச் செல்பவர்கள் தடம்மாறி பயணிக்கும் சம்பவங்கள் பல இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறான சம்பவங்களை காடேறி அழைத்துச் செல்வதாக வன்னியில் மூத்தவர்கள் பேசிக்கொள்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.