யாழில் மின்னல் தாக்கி உயிரிழந்த 3பேர்!! மின்னல் தாக்கிய போது நடந்தது என்ன? நேரில் ஆராய்ந்த அரச அதிபர் என்ன செய்தார்? (Video)
தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களில் ஒருவர் மதிய உணவு எடுத்து வரச் சென்ற தோட்ட உரிமையாளரைக் காணாமையால் அவரைத் தேடிச் சென்றுள்ளார்.
இதற்கிடையே இடிமின்னல் தாக்கத்துடன் கடும் மழை பெய்தமையால் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த இரு பெண்களும், தோட்ட உரிமையாளரும் அருகிலிருந்த சிறு கொட்டிலுக்குள் ஒதுங்கியுள்ளனர். அப்போது தான் குறித்த பகுதியில் எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி மூவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் தோட்டத்திற்கு வருகை தந்த பெண் இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் மயக்கம் தெளிந்த குறித்த பெண் அயலிலுள்ள வீட்டாருக்குச் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.
இடி மின்னல் தாக்கியது எப்படி?
மேற்படி பகுதியில் வளர்ந்த நிலையில் காணப்படும் தென்னை மரமொன்றின் மீதே இடிமின்னல் முதலில் தாக்கியுள்ளது. இதனால், அந்தத் தென்னைமரத்தின் மேற்பகுதி மற்றும் ஓலைகள் கருகியுள்ளன. குறித்த இடி மின்னலின் தாக்கம் அருகிலிருந்த சிறிய தென்னை மரத்திலும் உணரப்பட்டுள்ளது.
இந்தத் தென்னை மரத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறுகொட்டில் தாங்கி நிற்கும் வகையில் பலகையூடாக ஆணி அடித்துக் கம்பி சுற்றப்பட்டிருந்தது. குறித்த ஆணியே இடி மின்னல் தாக்கத்தைச் சிறிய தென்னை மீது கடத்துவதற்கு காரணமாகும்.
இடிமின்னல் தாக்கத்தால் சிறிய தென்னைமரத்தின் கீழ்ப்பகுதி கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் கொட்டிலில் காணப்பட்ட கதிரையும் சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
பெருமளவு மக்கள் படையெடுப்பு
இந்தச் சம்பவத்தை அறிந்து அப்பகுதி மக்கள் மாத்திரமன்றி யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான் மக்கள் சம்பவம் இடம்பெற்ற பகுதியைப் பார்வையிட்டு வருகின்றனர்.
மேற்படி சம்பவத்தில் பலியான மூவரில் தோட்ட உரிமையாளரான திருநாவுக்கரசு கண்ணன்(வயது-48),திருமதி-மைனாவதி கந்தசாமி(வயது-52) ஆகிய இருவரும் சகோதரர்களாவர். இவர்களில் திருநாவுக்கரசு கண்ணன் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதுடன் திருமதி -மைனாவதி கந்தசாமி ஆறு பிள்ளைகளின் தாயாவார்.
அத்துடன் திருமதி- சுதா திருநாவுக்கரசு(வயது-38) என்ற இளம் குடும்பப் பெண்மணியும் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மேற்படி மூவரும் ஏழாலை தெற்கு மயிலங்காட்டுப் பகுதியில் அருகருகே வசிப்பிடத்தைக் கொண்டுள்ள நிலையில் மூவரதும் திடீர் இழப்பு குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
{நேரடி ரிப்போர்ட் மற்றும் காணொளி:- யாழ்.குப்பிழானிலிருந்து செ.ரவிசாந்-}
உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது.
இன்று காலை 6 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தலைமையில் உடுவில் பிரதேச செயலர் ஜெயக்காந், மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) முரளிதரன், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அபராசுதன், கிராம சேவகர், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் அடங்கிய குழுவினர் மின்னல் இடந்த நிகழ்ந்த சம்பவ இடத்தினை சென்று பார்வையிட்டனர்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கும் சென்றனர்.
இதன்போது சமுர்த்தி பாதுகாப்பு நிதியத்தின் இறப்பிற்கான கொடுப்பனவு ரூபா 15 ஆயிரம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் கொடுப்பனவு ரூபா ஒரு லட்சம் வழங்க அரச அதிபர் பணித்தார்.
அதில் உடனடியாக பதினையாயிரம் ரூபாவினை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அரச அதிபர் வழங்கினார். மீதிக் கொடுப்பனவு இறப்புச் சான்றிதழ் கிடைத்ததும் விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கான வீட்டுத்திட்டத்தினை முன்னுரிமை அடிப்படையில் வழங்கவுமாறும் அரச அதிபர் பணித்தார்.